சோப்பில் சிற்பங்கள் செய்து அசத்தும் பள்ளி மாணவர்கள்
மதுரை புதூர் அருகே அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு ஷேக் நபி என்பவர் தலைமையாசிரியாராக பணியாற்றி வருகின்றார். 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியான இந்தப் பள்ளியில், ஷேக் நபி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றதிலிருந்து பள்ளியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.
அந்தவகையில், கொரோனா பொது முடக்க காலத்தில் மாணவர்கள் பயனுள்ளதாக நேரத்தை செலவழிக்கும் வகையிலும், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும் மாணவர்களுக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல், பென்சில் சிற்பம், சோப்பில் சிற்பம் செதுக்குதல் என பலகட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக ஓவியாசிரியர் சண்முகசுந்தரம் மாணவர்களுக்கு சோப்பில் சிற்பங்கள் செதுக்கும் பயிற்சியினை அளித்து வருகின்றார். இப்பயிற்சி பெற்ற 12 மாணவர்கள் சேர்ந்து குளியல் சோப்பினால் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையிலான சிற்பங்கள், மெக்கா, மதினா, கோபுரம், தேவாலயம், அன்புச் சங்கிலி, தாய் - சேய், விநாயகர், திருவள்ளுவர், பாரதியார், பறவைகள், மீன், ஒரே சோப்பினால் செய்யப்பட்ட சூழலும் பொம்மைகள் மற்றும் மதுரையின் அடையாளமாக விளங்கக்கூடிய கள்ளழகர் குதிரையில் வரும் சிற்பம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம், டில்லி கேட், கப்பல், படகு உள்ளிட்ட 72 சிற்பங்கள் செய்து அசத்தியுள்ளனர்.
மாணவர்கள் முயற்சியால் குளியல் சோப்புகளில் செய்யப்பட்ட கலைநயமக்க சிற்பங்கள், கலைப் பொருட்களை அந்தப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்களும் பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்களை ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். சோப்பில் மதநல்லிணக்க மற்றும் தலைவர்கள் சிற்பங்கள் செதுக்கிய மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மட்டுமல்லாது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.