10ம் வகுப்பு அசல் சான்றில் திருத்தம் இருப்பின் சரிசெய்ய தேர்வுத்துறை உத்தரவு
பத்தாம் வகுப்பு அசல் சான்றிதழில் திருத்தம் இருந்தால், உரிய ஆதாரங்களை அனுப்புமாறு அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வு துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை கடந்த கல்வி ஆண்டில்(2020-21) 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில் பிழை திருத்தங்கள் இருந்தால், அது குறித்து, மாணவர்களிடம் உரிய ஆதாரங்களை பெற வேண்டும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக சான்றிதழில் பதிவுகள் சரியாக இருந்தால், அந்த நகலுடன், அசல் சான்றிதழ் நகலையும் இணைத்து அனுப்ப வேண்டும்.தேர்வரின் பிறந்த தேதி, இனிஷியல், தமிழ், ஆங்கில மொழிகளில் பெயர் திருத்தங்கள் போன்றவற்றில் மாற்றம் இருந்தால், மாற்று சான்றிதழின் தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட்ட நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
தந்தை அல்லது தாயின் பெயரில் திருத்தங்கள் இருந்தால், தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட ஆளறி சான்றிதழ் என்ற, 'போனபைட்' சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.