எதற்காக மரியாதையை எதிர்பார்க்கிறீர்கள்!
நான் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி. எனக்கு எதிரில் நிற்கக்கூட பயப்படுவார்கள். எனக்கு இருக்கும் மதிப்பு தெரியாமல், என்மகன் என்ன எடுத்தெறிந்து பேசுகிறான். அவனை எப்படி திருத்துவது?
திருத்த வேண்டியது அவனை அல்ல. நீங்கள் மற்றவர்களிடமிருந்து எதற்காக மரியாதையை எதிர்பார்காகிறீர்கள்?. மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்ற எதிர்பார்ப்புதானே? மரியலில் ஈடுபட்டு ஆர்பாட்டம் செய்பவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களும் மற்றவர் கவனத்தைக் கவர்வதற்குத்தானே அப்படிச் செய்கிறார்கள். அவர்களை மட்டும் ஏன் தடியடி நடத்திக் கலையச் செய்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இன்றைய காலக்கட்டத்தில் நீங்கள் உள்ளுக்குள் முழுமையானதாக உணரவில்லை. அரைகுறையாக இருப்பதாக நினைக்கிறீர்கள். காலியிடத்தை இட்டு நிரப்புவதற்கு மற்றவர்களின் கவனம் தேவைப்படுகிறது.
மரியாதையை அதிகாரத்தாலோ, பாசத்தினாலோ கேட்டுப் பெறுவது பிச்சை எடுப்பதுபோல. உங்கள் மகன் எப்போது உங்களை அவமரியாதை செய்கிறார். சில சமயம் மற்றவர் பார்வையில் நீங்கள் வேண்டாதவராகத் தெரிந்தால் அதற்குக் காரணம் நீங்கள்தான்.
எப்போதெல்லாம் நீங்கள் அரைகுறையாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் தவறுகளை ஏற்கும் தைரியமின்றி மற்றவர் மீது பழி சுமத்துவதே வழக்கமாகிவிட்டது. உங்களிடம் இருக்கும் மோசமான பகுதிக்குத் தன்மானம் சுயமரியாதை என பெயர் வைத்து அழகு பார்க்காதீர்கள்.
ஒருவர் தெருவில் செல்லும்போது ஒரு தவளை "நீ என்னை முத்தமிட்டால் ஒரு பெண்ணாக மாறி உன்னுடனேயே தங்குவேன்" என்றது. அந்த தவளையை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். தான் சொன்னதையே திரும்பச் சொல்லி அதை வெளியே எடுப்பதும் பாக்கெட்டில் வைப்பதுமாக இருந்தார் அவர். உனக்கு விருப்பமில்லை என்றால் என்னை ஏன் எடுத்தாய் என்றது தவளை. அதற்கு அதை அடுத்தவர் "எனக்கு ஆயிரம் அழகிய பெண்கள் கிடைப்பார்கள். ஆனால் பேசும் தவளை கிடைப்பது அபூர்வம் அல்லவா" என்றாராம். நீங்களும் அந்த மனிதனைப் போலத்தான் ஒரு பேசும் தவளை அழகிய பெண்ணாக உருமாறினால் என்னென்ன கிடைக்கும் என்பதை யோசிக்காமல் பேசும் தவளை கிடைத்ததற்கே திருப்தி அடைகிறீர்கள்.
இன்றைக்கு அளவுக்கு அதிகமாக மரியாதை தருபவர்களே நாளை உங்களைத் திரும்பிப் பார்க்காமல் போகலாம். ஒவ்வொரு முறையும் அது உங்களுக்கு வலி தருமேயானால் தவறு உங்களிடத்தில்தான் உள்ளது. நீங்கள் கசப்பாக உணரும் அனுபவங்கள் எல்லாம் உடனே அனுபவித்து விடுவது நல்லதுதான்.
வாழ்க்கையின் சின்ன படிப்பினை கூட தாமதமாக தாமதமாக உங்கள் வாழ்க்கை அல்லவா வீணாகிறது. உங்கள் அனுபவங்களுக்கு விதி, தன்மானம், சுய கௌரவம், ரோஷம் என்று ஏதாவது பழி சுமத்திக்கொண்டு இருக்கும் வரை ஒருநாளும் ஆனந்தத்தின் ருசியை உணரமாட்டீர்கள். இதை உணர்ந்துவிட்டால் மிச்சமிருக்கும் வாழ்க்கையை யாவது அற்புதமாக, ஆனந்தமாக நடத்திக் கொள்வது எப்படி என்று பார்க்க ஆரம்பிப்பீர்கள்.