இணையம் வழியே 25 சதவீத சலுகையில் புத்தகங்கள் விற்பனை
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவலால் பொருட்காட்சி, புத்தகக்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சில பதிப்பகங்கள் இணைய வழியில் 25 சதவீத சலுகையுடன், புதிய புத்தகங்களை விற்க துவங்கியுள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய சென்னை புத்தகக்காட்சி, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நாளை துவங்க இருந்தது.புதிய கட்டுப்பாடு இதில், 10 சதவீதம் முதல் சலுகை விலையில் புத்தகங்கள் விற்கப்படும்; அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களையும், ஒரே இடத்தில் வாங்கலாம் என்பதாலும், உலக தமிழ் வாசகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவுவதால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 10ம் தேதி வரை, புத்தகக்காட்சி, பொருட்காட்சி உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.இதனால், இந்த புத்தகக் காட்சியில், 10 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடக்கும் என எதிர்பார்த்திருந்த பதிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், துவண்டிருந்த வாசகர்களுக்கு, புத்தகக்காட்சியை விட கூடுதல் சலுகையில், இணைய வழியில் புத்தகங்களை விற்க, சில பதிப்பகங்கள் முன்வந்துள்ளன.
இது குறித்து, யாவரும்பதிப்பக உரிமையாளர் ஜீவகரிகாலன் கூறியதாவது:புத்தகக்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வாசகர்களுக்கு புத்தகங்களை கொண்டு சேர்க்கும் வகையில், எங்கள் பதிப்பகத்தில், 20 முதல் 30 சதவீதம் சலுகை விலையில், புதிய புத்தகங்களை விற்பனை செய்கிறோம். இந்த சலுகை 18ம் தேதி வரை தொடரும். மேலும் விபரங்களுக்கு, 90424 61472 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல, பாரதி புத்தகாலயமும், ஆன்லைன் பொங்கல் புத்தக திருவிழா' என்ற பெயரில், ஜனவரி 17 வரை, 25 சதவீத சலுகையில் புத்தகங்களை விற்பனை செய்கிறது.மேலும் தகவலுக்கு, 044 2433 2424 என்ற தொலைபேசி எண்; thamizhbooks.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறுபதிப்பகங்களும், சலுகை விலையில் புத்தக விற்பனையை தொடர ஆலோசித்து வருகின்றன.