பிற பாட திட்டத்தில்படித்த மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பாட திட்ட பள்ளிகளில் சேர, சிறப்பு அனுமதி எதுவும் பெற வேண்டாம்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள இணையவழி சுற்றறிக்கை: கொரோனா பிரச்னைக்கு பின், இந்தியாவைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசித்து வந்த நிலையில், குடும்பத்துடன் தாய்நாட்டுக்கு திரும்பி உள்ளனர். அதனால், வெளிநாட்டு பாட திட்டத்தில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாற விண்ணப்பித்து உள்ளனர்.
மற்ற பாட திட்டத்தில் இருந்து வரும் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் இணையான வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். இதில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் சேர, பல மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, இணை சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் சேர வரும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே தங்கள் அனுமதி பெற வேண்டிய முறை நீக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு இணையான, வெளிநாட்டு பாட திட்டங்களின் விபரங்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. எனவே, பள்ளிகள் தரப்பில் சி.பி.எஸ்.இ.,யில் சிறப்பு ஒப்புதல் எதுவும் பெறாமல், மாணவர்களை சேர்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.