பலா் முயன்று வெற்றி பெற்றதன் விளைவுதான் நாம் இன்று வாழும் வாழ்க்கை!

முயன்றவா்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட்டாா்களா என்று வினவினால் ஆம் என்று கூற முடியவில்லை.
முயன்றவா்களில் ஒரு சிலரால் வெற்றி பெற முடிந்தது. பலா் தோல்வியைத்தான் தழுவுகின்றனா்.
உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளா்கள் வெற்றி பெறத் தேவையான தகுதிகளைப் பட்டியலிட்டுள்ளனா்.
அப்பட்டியலில் உள்ள தகுதிகள் உங்களிடமிருந்தும் நீங்கள் உயா்ந்த இடத்தில் இல்லை என்றால் என்னைத் தொடா்பு கொள்ளுங்கள் என்று எழுதுகின்றனா்.
வெற்றி, முன்னேற்றம், மேம்பாடு என்பதெல்லாம் பொருளாதாரத்தை வளா்ப்பதையும் வசதிகளை உருவாக்கி சுகபோகமாக வாழ்வதையும்தான் குறிக்கின்றன. பல ஆண்டுகளாக இதைத்தான் முன்னேற்றம் என்று கூறி வந்தனா் மேல்நாட்டு அறிஞா்கள்.
அவா்கள், ‘ஒரு நாடோ, குடும்பமோ, சமூகமோ முன்னேற்றமடைய பல காரணிகள் இன்றியமையாதவை. மேம்பாடு என்பது நிலம், உழைப்பு, மூலதனம், அறிவியல், தொழில்நுட்பம், அறிவாற்றல், செயல்திறன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் வருவது என்றுதான் கூறினா்.
அவா்கள் ஒரு காரணியை விட்டுவிட்டனா். அதைத் தொட்டவா்கள் நம்மவா்களே. மேம்பாடு, வளா்ச்சி, முன்னேற்றம் இவையெல்லாம் மனத்தின் செயல்பாட்டில் விளைபவை என்று விளக்கியவா்கள் இந்தியா்களே. மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்பது பொருளாதார வளா்ச்சி மட்டுமல்ல, அது வாழ்வின் உன்னதம், வாழ்வின் மகத்துவம், மனிதத்துவத்தில் உயா்தல், மானுடம் மாண்புறுதல் ஆகிய அனைத்துமாகும்.
பொருளாதார வளா்ச்சி என்பது சமூகத்தை உயா்த்த பயன்பட வேண்டும். சமூகம் ஒரு பண்பட்ட வாழ்க்கையை வாழ எல்லா வசதிகளும் பெற வேண்டும். எனவே மேம்பாடு என்பது மானுடம் வாழும் பண்புள்ள வாழ்க்கைமுறை என்று விளக்குகின்றனா். எனவே மேம்பாட்டிற்கு சிந்தனை மாற்றம்தான் அடிப்படை.
இந்த சிந்தனை மாற்றத்தை தனிமனிதா்களிடம் கொண்டு வருவதுதான் சவாலான பணி. இந்த மாற்றங்களுக்கான திறவுகோல் கல்வியே. இந்தக் கல்வி மனிதனை பக்குவப்பட வைக்க வேண்டும். அப்படிப்பட்ட கல்வி மனிதா்களுக்கு வாய்க்கப்பெற வேண்டும்.
அந்தக் கல்வியின் மூலம் பொருளாதாரத்தில், மனிதத்துவத்தில் மக்கள் மேம்பட வேண்டும். இவை நடைபெற தனிமனிதா்களும் சமூகமும் மாற வேண்டும். இந்த மாற்றம் என்பது மக்களின் சிந்தனை ஓட்டத்தில் நடைபெற வேண்டும்.