இயலாமையைஏற்றுக் கொள்வோம்!

அநேகம் மனிதர்களுக்கு சரியான புரிதல் இல்லை.தங்கள் தவறுகளை கண்டு கொண்டு அதை திருத்திக் கொள்வது நல்லது. அது தங்களுக்கு உயர்வை தரும் என்பது தெரியவில்லை.
பொதுவாக நமது தவறுகளை யாரேனும் சுட்டிக் கட்டினால்,அவரை எதிரியாக பார்க்கிறோம்.
நம்மை குற்றம் சுமத்துகிறார் என்று அவரை வெறுப்புடன் பார்க்கிறோம் இல்லை வேதனை படுகிறோம்.
அல்லது நமது குற்றங்களை நியாயப் படுத்த முயலுகிறோம்.அவரை திருந்த சொல்லு, இவரை திருந்த சொல்லு என்று பிறரின் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம்.
மொத்தத்தில் நமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வே இல்லை.இது பொதுவான மனித இயல்பு.
நமது மேல்மனம் இந்த மாதிரி இயல்புகளையே பார்த்து பழகி விட்டதனால் இது தான் சரி என்று நமக்கு சொல்கிறது.
எப்போதும் மேல்மனம் சொல்வது தான் நமக்கு பிடித்தமாக இருக்கிறது.ஆழ் மனதின் மெல்லிய குரல் நமக்கு கேட்க மாட்டேங்குது.
சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஒரு அரைமணி நேரம் ஜாக்கிங்.அப்புறம் ஒரு பத்து நிமிடம் ரெஸ்ட்.
மீண்டும் ஒரு முக்கால் மணி நேரம் நல்ல workout. ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு நல்லா வெந்நீரில் ஒரு குளியல்.
அப்புறம் ஒருமணி நேரம் கழித்து அரைவயிறு சாப்பாடு.அதன் பின் முக்கா மணி நேரம் புக் படிப்பது.அல்லது சின்ன வாக் போய் விட்டு படுத்தால் உடலும் மனமும் அய்யா சாமி என்று கெஞ்ச நல்ல தூக்கம் வரும்.
இப்படி உடலையும் மனதையும் கெஞ்சும் படி வேலை வாங்கினால் அது நமக்கு அடிமையாக செயல் படும். அதை விட்டு விட்டு சும்மா டீ.வி யை பார்த்துக் கொண்டு நொறுக்கு தீனி தின்ன வேண்டியது.
ஒன்பது மணிக்கு வயிறு முட்ட கண்டதையும் சாப்பிட வேண்டியது. அப்படியே படுக்கையில் விழுந்து இரவு ஒரு மணி இரண்டு மணி வரை செல் போனை நோண்ட வேண்டியது என்று வாழ்கை நடத்தினால் உங்கள் உடம்பு மற்றும் மனதிற்கு நீங்கள் அடிமை என்று அர்த்தம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள்.எல்லா வேலையையும் அப்புறம் பாத்துக்கலாம், அப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
கடைசி வரை எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள்.மேல் மனம் எப்போதும் எதையும் எதிர்கொள்ள தயங்கி கொண்டே இருக்கும்.
எப்போதும் சௌகரியமான நிலையை அடைவதே அதன் நோக்கமாக இருக் கும். அந்த மாதிரி செயலில் தான் ஈடுபாடு காட்டும்.
இன்று மக்கள் வாழ்வதின் நோக்கமே சௌகரியம் தான். நல்ல நிம்மதியான வாழ்வு வேண்டும். அதற்குத்தான் காசு,குடும்பம்.எல்லாம்.
எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாய் ஓய்வு ஒழிவு இல்லாத ஓட்டம்.ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டார்.
சலியாத உழைப்பு.அதனால் நல்ல உயர்ந்த அளவில் தரமான வாழ்கை. நான் அவரை பார்த்து பொறாமை பட்டது உண்டு.
இந்த வாழ்வை ஒரு கணம் கூட வீணாக்காமல் ஓயாது செயல் படுகிறார். உண் மையில் இவர் தனக்கு கிடைத்த பிறவியை சரியாக பயன் படுத்துகிறார் என்று நினைத்தேன்.
சமீபத்தில் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது அவர் மிகவும் மனம் தளர்ந்து போய் இருந்தார்.
எனது ஐம்பது வருட உழைப்பு அத்தனையும் வீணாகி விட்டது.நான் எங்க அப்பா,அம்மாவை சரியாக கவனிக்கவில்லை.
எனது மனைவி,குழந்தைகள் என்று குடும்பத்தினருடனும் அதிக நேரம் செலவி டவில்லை.எப்போதும் எதிர்காலத்தை எண்ணியே வாழ்ந்து வந்தேன்.
இன்னும் ரெண்டு வருடத்தில் எல்லாம் செட்டில் செய்து விட்டு நிம்மதியாய் ஓய்வு எடுக்கலாம் என்று நம்பினேன்.
ஆனால் எல்லாமே போச்சு.இன்று அனைத்தையும் நான் இழந்து விட்டேன். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாகி விட்டது என்று புலம்பினார்.
இத்தனை நாள் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் ஆகி விட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை என்று மிகவும் நொந்து போய் பேசினார்.
நமது வாழ்கை என்பது இது தான். ஏன் இப்படி நடக்கிறது என்று கேள்வி கேட்க முடியாது.
இது இப்படித் தான் நடக்க வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப் பட்டது. அதில் மாற்றமில்லை.
நமது எதிர்காலத்தை எண்ணி கடந்த காலத்தில் செயல் பட்டவை எதற்கும் எந்த பலனும் இல்லை என்பது இன்று தெரிகிறது.
பின் எந்த நம்பிக்கையில் வருங்காலத்தை எண்ணி இப்போது செயல் படுவது என்பது தான் இப்போது நமது கேள்வி.
அதுவும் நாளை பலனற்று போய் விடுமோ என்கின்ற பயம்.அதனால் இன்று எதை செய்வதற்கும் தயக்கம்.கலக்கம்.
இது தான் வாழ்கை.நம் கையில் எதுவும் இல்லை என்னும் இயலாமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை ஏற்றுக் கொண்டு அனைத்தும் இறைவனின் செயல் என்று மௌனமாக கடந்து செல்ல பழக வேண்டும்.
நடந்தவை அனைத்தும் நன்மைக்கே. நடக்கப் போவதும் நல்லவையே. இறைவனை நம்புங்கள்.
அவன் நம்மை கைவிடுவதில்லை.