ஆசிரியர்களே மாணவர்களின் முதல் முன்மாதிரிகளாக அமைகின்றனர்!
பேசிப்பேசியே ஆட்சியைப் பிடிக்கும் அரசியல்வாதிகள்,
நயமான பேச்சாலேயே சமயக்கருத்தைப் புகுத்தும் ஆன்மீகவாதிகள்,
மூளைச்சலவை செய்தே பணம் சம்பாதிக்கும் விளம்பரதாரர்கள்,
நுட்பமான பேச்சால் தம் கட்சிக்காரரைக் காப்பாற்றும் வழக்கறிஞர்கள்,
கடல் அலைபோல நிறைந்த கூட்டத்தைக்கூட தம் இனிமையான பேச்சால் கட்டிப்போடும் மேடைப் பேச்சாளர்கள்,
என யாவருக்கும் பொதுவானது பேச்சுக்கலை. என்றாலும் இப்படி நல்ல பேச்சாளர்கள் உருவாகும் இடம் பெரும்பாலும் பள்ளிகளாகவோ, கல்லூரிகளாகவோ அமைகின்றன. ஆசிரியர்களின் பயிற்சி, பாராட்டு, ஊக்குவிப்பு மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக உருவாக்கும்.
ஆசிரியர்களே மாணவர்களின் முதல் முன்மாதிரிகளாக அமைகின்றனர்.
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
(திருக்குறள் -872)
என்பார் வள்ளுவர்.
அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும். வள்ளுவர் சொல்வதுபோல சொல்லை ஏராகக் கொண்டு உழக்கற்றவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் பயிலும் மாணவர்கள் பேச்சாளர்களாக உருவாகமுடியும்.
பார்க்கும் மாணவரைக் கேட்கவைத்து,
கேட்கும் மாணவரை உற்றுநோக்கவைத்து,
உற்றுநோக்கும் மாணவரை உள்வாங்கவைத்து,
உள்வாங்கும் மாணவரை உணரவைத்து,
உணரும் மாணவரைப் பின்தொடரவைத்து,
பின்தொடரும் மாணவரை தேடவைப்பதே
ஒரு சிறந்த ஆசிரியரின் கடமையாகும்.
இன்று உள்ள பொழுதுபோக்கு சாதனங்களையும், கவனச் சிதறல்களையும் கடந்து மாணவரைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே பெரிதாக உள்ள இக்காலச்சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களைச் சிந்திக்கவைப்பது என்பது மிகப் பெரிய இலக்காகத் தான் உள்ளது.
-முனைவர் இரா.குணசீலன்