பொறியியல் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு நேரடி எழுத்துத்தேர்வு
கொரோனா தொற்று காரணமாக என்ஜினீயரிங் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் கடந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வுகளையும் நேரடி எழுத்துத்தேர்வாக நடத்துவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதுநிலை மற்றும் முழு நேர பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் வரும் ஆய்வக படிப்புகள், கருத்தியலுடன் கூடிய ஆய்வக படிப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் மற்றும் பி.ஆர்க்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகியவற்றில் வரும் கருத்தியல் மற்றும் ஸ்டூடியோ படிப்புகளில் செப்டம்பர்-டிசம்பர் கல்வியாண்டில் அனைத்து உள் மதிப்பீடுகள், இறுதி செமஸ்டர்கள் நேரடி எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும்.
இதேபோல், தொலைதூரக்கல்வியில் வரும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. படிப்பு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வும் நேரடியாக நடத்தப்பட இருக்கிறது. மேலும், பி.ஆர்க். படிப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.