உங்கள் வாழ்வை சிறப்பாக மாற்ற கூடிய விஷயங்கள்!!!
தொலைந்து போங்கள். ஆம் சரியாகத்தான் படிக்கிறீர்கள். வாரத்துக்கு/மாதத்திற்கு ஒருமுறையேனும் தொலைந்து போங்கள்.
மொபைல் போனை எடுத்துக்கொண்டு, பகல் நேரத்தில், இதுவரை பயணிக்காத ஒரு புது பாதையில் (மக்கள் நடமாட்டம் இருக்கனும்) ஒரு மணி நேரம் மெதுவாக நடந்து சென்று, மறுபடியும் (கூகுளில் தேடாமல்) வீட்டிற்கு திரும்பி வாருங்கள். அந்த ஒரு மணி நேரம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் விழிப்புணர்வுடன் இருக்கும். வீட்டிற்கு வந்ததும் நிச்சயமாக ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள்.
துறுதுறுவென இருங்கள். எப்பொழுதும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். தூக்கம் வராதபோது சோர்வாக உணர்ந்தாலும் கூட ஏதாவது காபி/டீ குடித்துவிட்டு வீட்டை சுத்தப்படுத்துவது, அலமாரியில் துணிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற சின்னச் சின்ன வேலைகள்.
ஒதுங்கி இருங்கள். உங்களின் இயல்புக்கு எதிரானவர்களை, "மூட் அவுட்" ஆக்குபவர்களை விட்டு ஒதுங்கி இருங்கள்.
சிலருக்கு வீட்டில்/பணி இடத்திலேயே வாய்த்து விடுவதுண்டு. தவிர்க்கவே முடியாதது தான். குறைந்தபட்சம் நேருக்கு நேர் முகத்தை பார்க்காமல் தவிர்த்துவிடலாம். நவகிரகங்களை போல் திரும்பி கொள்ள வேண்டும். பகிர்ந்து கொள்ளுங்கள். சந்தோஷமோ, கஷ்டமோ கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு அழுத்தத்தை அதிகரிக்க வேண்டாம். இதை வெளியே சொன்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க என்று நினைத்து சொல்லாமல் அடக்கி, அழுத்தி வைத்து ஹார்ட் அட்டாக் வந்து போய் சேர்ந்தவர்களே அதிகம்.
பேசுங்கள். உங்களைவிட 20 வயது குறைந்தவர்களுடனும், 20 வயது அதிகமானவர்களுடனும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுங்கள். சிறியவருடன் பேசும்போது நீங்கள் சிறு வயதில் என்ன செய்திருப்பீர்கள் என்று ஞாபகம் வரும். நம்முடைய அச்செயல் பற்றிய மதிப்பீடு செய்து கொள்ளலாம். மூத்தவருடன் பேசுகையில் கண்டிப்பாக ஏதோ ஒரு அனுபவ அறிவை கற்று இருப்பீர்கள்.
நீங்கள் யார் வீட்டுக்காவது போய் இரண்டு நாள் தங்குங்கள். அல்லது யாரையாவது உங்க வீட்டுக்கு ரெண்டு நாள் தங்குவதற்கு கூப்பிடுங்கள். அவர்களுடன் இரண்டு நாள் செலவு செய்ததில் சந்தோஷமாக இருந்தாலும் நல்லது. ஏண்டாப்பா கூப்பிட்டோம்ன்னு நினைச்சாலும் ரொம்ப நல்லது. அவங்க போனதுக்கப்புறம் நீங்க ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவீங்க.
சரியென நினைப்பதை செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தம்மை யாருடனாவது ஒப்பிட்டு தளர்ந்து போக வேண்டாம். "அறிவுக்கும் மனசுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை. சரியென்ன? தவறென்ன? எவருக்கு, எது வேண்டும் செய்வோம்.
தனியாகவும் இருக்கலாம். ஒரு கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள, தனக்கு ஒத்துவராத/ பிடிக்காத விஷயங்களை வலுக்கட்டாயமாக பழக்கப்படுத்திக்க வேண்டாம். "வந்தார்கள், போனார்கள் நேற்று. யாருக்கும் சுவடு இல்லை இன்று."
எதிர்பார்பில்லாமல். எந்த வெகுமதியும் அற்ற ஒரு பொழுதுபோக்கை பழகி கொள்ளுங்கள். ஏனென்றால் எதிர்பார்ப்பும் இருக்காது, ஏமாற்றமும் இருக்காது.
எத்தனை உறவினர்கள் இருந்தாலும் நண்பர்கள் அவசியம். அதிலும் குறிப்பாக அக்கம்பக்கத்தினர், ஆன்லைன் பிரண்ட்ஸ். மதிப்பு கூட்டுதல் (value addition) என்று சொல்வார்களே அதுபோல. நம் வாழ்க்கைக்கு கேக்/ஐஸ்க்ரீம் மேலே செய்த டாப்பிங்.
நேர மேலாண்மை. வாழ்க்கையை மிகச் சிறப்பாக மாற்றும். நம்முடைய வேலைகளை நமக்கு தோதான நேரத்தில் செய்துகொண்டாலும் கூட, பிறருக்கு உறுதியளித்த நேரத்தை சரியாக கடைபிடித்தால் நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படும்.