இருள் என எண்ணாமல் சோதனைகளை வெற்றி வாய்ப்பாக மாற்றியவர்!

சோதனைகள் ஏற்பட்ட உடனேயே வாழ்க்கையில் இருள் கவிழத் தொடங்கிவிட்டது என எண்ணி வேதனை அடையக்கூடாது. நம்முடைய திறமைக்கு அது ஒரு சவால் என்கிற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும்.
பிரபல ஆங்கில எழுத்தாளர் ஒருவர் எழுதிய கதை ஒன்று. லண்டன் தேவாலயத்தில் வேலை பார்க்கும் பணியாள் வயோதிக எழுதப் படிக்கத் தெரியாதவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த தேவாலயத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறவர். தேவாலயத்தின் பொறுப்பினை ஒரு புதிய பாதிரியார் ஏற்கிறார். எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் பணியாளனாக இருப்பதை விரும்பவில்லை.
ஒருநாள் அவரை அழைத்து எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ளும்படி சொல்கிறார். அந்த வயதில் அது சாத்தியம் இல்லை என்று அவர் சொல்ல அப்படியானால் உனக்கு ஒருமாத கால அவகாசம் தருகிறேன். அதற்குள் அந்த முயற்சியில் நீ ஈடுபட வில்லையானால் உன்னை வேலையைவிட்டு நீக்குவதைத் தவிர வேறுவழியில்லை எனக்கூறி அவ்வாறே ஒரு மாதம் ஆன பின் அவரை வேலையில் இருந்து நீக்கியும் விடுகிறார்.
அவர் சுருட்டுப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர். வேலையை விட்டு நீங்கிய தினத்தன்று மாலை வீட்டுக்குச் சென்று கொண்டு இருக்கும் போது, சுருட்டுப்பிடிக்க நினைக்கிறார். அவரிடம் சுருட்டு இல்லை பக்கத்தில் உள்ள கடைகளிடம் கேட்டுப்பார்க்கிறார்; கிடைக்கவில்லை.
அவர் யோசித்தபோது தன்னைப்போல பலரும் இந்தத் தெருவில் போகும்போது சுருட்டுப்பிடிக்க எண்ணி அதற்காகக் கஷ்டப் பட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது.
உடனே அங்கே ஒரு சுருட்டுக்கடை வைக்க முடிவு செய்து சில தினங்களிலேயே தொழிலைத் தொடங்கிவிடுகிறார். சில ஆண்டுகளில் பெரிய புகையிலை வியாபாரியாக மாறிவிடுகிறார்.
ஒருநாள் வங்கிக்குச் செல்லுகின்றபோது ஒருபாரத்தில் அவர் கையெழுத்திட வேண்டி இருக்கிறது. படித்துப் பார்த்து கையெழுத்துப் போடச் சொல்கிறார் மானேஜர்.
அவரையே படித்துக் காட்டும்படி அவர் கூறுகிறார். அப்போதுதான் தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்ற விவரத்தை மானேஜரிடம் சொல்கிறார்.
ஆச்சரியம் அடைந்த அவர். எழுதப்படிக்கத் தெரியாத நிலையிலேயே பெரிய கோடீஸ்வரன் ஆகிவிட்டீர்கள். எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் இன்னும் எந்த நிலைக்கு உயர்ந்திருப்பீர்களோ?" எனக் கூறினார்.
அதைக்கேட்டு சிரித்த அவர், "எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் நான் ஒரு சாதாரணப் பணியாளராகவே வேலையில் தொடர்ந்து இருந்திருப்பேன்" என்று அவர் பதில் சொல்லுகிறார்.
வேலையை விட்டு நீக்கப்பட்டது அவருக்கு ஒரு சோதனை ஆயிற்று. அதைக்கண்டு அவர் அஞ்சவில்லை. அந்தச் சோதனையினை தனக்கு ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டார். இதை வெறும் கதை என எண்ண வேண்டாம். வாழ்க்கையில் நெருக்கடிகளுக்கு உள்ளான பலர், அந்த நெருக்கடிகளையே சவால்களாக ஆக்கிக்கொண்டு மிகப்பெரிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
வாழ்க்கையில் கஷ்டங்களை எவன் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள பழகுகிறானோ அவனே சாதனைகளையும் புரிகிறான். சோதனையை இருள் என எண்ணி அந்த இருட்டில் மூழ்கத் தொடங்கிவிட்டால் வாழ்க்கையில் வெளிச்சம் ஏது?
இருள் நிலையானது அல்ல என்பதையும், வெளிச்சம் வந்தே தீரும் என்பதையும் நாம் நம்ப வேண்டும். இருட்டுக்குப் பழகி அதிலேயே வாழ்ந்து விடுவோம் என எண்ணுவது கோழைத்தனம்.
சோதனைகளை இருட்டு என எண்ணாமல் வெளிச்சத்தைத் தரப்போகின்ற கைவிளக்கு என நாம் ஏற்றுக்கொண்டால். அந்தக் கைவிளக்கை ஏற்றுவதற்கான வழிவகைகளும் புலப்பட்டுவிடும்.