நம் வாழ்க்கையில் சேமிப்புதான் மிகப்பெரிய சம்பாத்தியம்!
ஒரு பக்கம் சம்பாதித்துக்கொண்டே, மறுபக்கம் கணக்கு வழக்கில்லாமல், தேவையில்லாமல் நிறைய செலவுகளைச் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஒருநாள் ஞானோதயம் வந்து, இனிமேல் பணத்தை மிகச்சரியாக கையாள வேண்டும் என்று முடிவெடுத்து, நியாயமான செலவைக்கூட யாரும் செய்யக்கூடாது என்று இறுக்கிப் பிடிக்கப்பார்ப்போம். திட்டமில்லாமல் திடீரென்று இறுக்கிப்பிடிக்க முயற்சிப்பதும் சரி, அல்லது ஏனோதானோவென்று செலவு செய்துகொண்டிருப்பதும் சரி, இரண்டுமே பெரிய சிக்கல்தான் அது மனிதர்களுக்குள் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.
நாம் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்கிறோமோ, அதே அளவுக்கு அதை வைத்துக்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடுவதும் மிக அவசியம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாதத்துக்கான வரவு-செலவு திட்டம் நம்மிடம் இருக்க வேண்டும். அப்படி வரவு-செலவு திட்டமெல்லாம் போட்டு அதன்படி குடும்பத்தை நடத்த முடியாது என்பது இரண்டாம் பட்சம் என்றாலும் திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம்.
ஒரு திட்டம் இருக்கிறபோது, ஒரு சரியான பாதையில் பயணிப்பதற்கு அது வழிகாட்டியாக இருக்கும் அடுத்த ஆறுமாதத்துக்குள் என்னென்ன செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை ஈடுகட்டுவதற்கு தேவைப்படக்கூடிய பொருளாதாரம் குறித்து குடும்பத்தாரோடு உட்கார்ந்து பேச அரைமணி நேரமே போதுமானது.
பணத்தை சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் கூட எப்படி கையாள்வது என்பதை பற்றி தெரிந்து வைத்திருக்கவில்லை. அதோடு பிள்ளைகளையும் நன்கு படியுங்கள், நன்கு சம்பாதியுங்கள் என்று தினந்தோறும் கூறும் பெற்றோர்கள் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதையும் கூடவே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இன்றைக்கு கடன் எல்லா பக்கத்திலும் கொட்டி கிடக்கிறது. எவ்வளவு பணம் வேண்டும். நாங்கள் தருகிறோம் நாங்கள் தருகிறோம் என்று தினந்தோறும் அலைபேசியில் பேசுவதைக் கேட்டு மனம் அலைபாய்ந்து கடன் வாங்கி, சிரமப்பட்டு கட்ட முடியாமல் திண்டாடுவதை விட, இந்தப் பணம் நமக்கு தேவையா? தேவையில்லையா? இதை திரும்ப செலுத்துவதற்கான வழி என்ன? என ஒரு நிமிடம் ஆராய்ந்தாலே அந்தப் பணத்திற்கான முடிவு கிடைத்துவிடும்.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு பணத்தை கையாளுகிற புரிதலை ஏற்படுத்தி விடவேண்டும். எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் அது வந்த விதத்தை சொல்லி வளர்ப்பதும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் பொறுத்துதான் அந்தப் பணம் அர்த்தப்படும்.