தோல்வியைத் துரத்தி அடிப்பது எது தெரியுமா?
ஆயிரம் பேர் நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், நாம் நினைத்து உழைத்தால், விடாமல் முயற்சி செய்தால் மட்டும்தான் அதை வெற்றியாக மாற்றமுடியும்.
தோல்வி என்பது நாம் தேடாமல் கிடைப்பது. வெற்றி என்பது நாம் போராடி பெறுவது. அப்படி போராடி பெறுவதில்தான் நம் மன தைரியமே அடங்கி இருக்கிறது. நம்மை நாமே செதுக்கிக்கொள்ள பலரது அவமானங்களும், சிலரது துரோகங்களும்தான் நமக்கு உளியாக இருக்கும். வாழ்க்கையில் உச்சத்தை தொட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு துரோகம் அவமானத்தை சந்தித்தவர்கள்தான்.
அப்பொழுதுதான் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இதிலிருந்து மீளவேண்டும். அதற்கு என்னென்ன பின்பற்ற வேண்டும். எப்படி ஜெயிக்க வேண்டும்? தோல்விகள் வந்தால் அதை எதிர்கொள்வது எப்படி? என்பதை வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் அதே வேலையை செய்யாதே என்று சொன்னாலும், தயங்காமல் செய்து அவர்கள் வழியில் முன்னேறியவர் கள்தான் பெரும் புகழ்பெற்றவர்கள் அனைவரும்.
ஆயக்கலை 64 என்று நமக்குத் தெரியும். அதில் 65 ஆவது கலை என்றால் அது அவமானங்களை சகிப்பதுதான். அப்படி சகித்துக் கொண்டு முன்னேற ஆரம்பித்தால் நாமும் இமயம் தொடலாம். நம்முடைய உழைப்பும் ஊக்கமும் ஒருபோதும் தோல்வியை சந்திக்காது. ஆதலால் துணிவுடன் செயல்படுவோம்.
நாம் வெற்றிப் பாதையை நோக்கி கவனத்தை செலுத்தும்பொழுது பல தோல்விகள் நம்மை வந்து சேரும். அது இயல்பு. அப்படி வரும் தோல்வியில் துவண்டு விடாமல் சிலிர்த்துக்கொண்டு எழுந்தால் தான் வெற்றித் திருமகள் நம் கரம் பற்றுவாள். ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு புத்தகம். நாம் அவர்களுடன் பேசும் போதும் பழகும் போதுமதான் புதிதாக ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம். அவர்கள் எப்படி எல்லாம் வெற்றி பெற்றார்கள், அதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்றினார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றி பெறவேண்டும் என்றால் பார்ப்பது, கேட்பது, படிப்பது, உரையாடுவது அனைத்திலும் கவனத்தை செலுத்த வேண்டும். அந்த கவனம்தான் தோல்வியிலிருந்து மீள வழி வகுக்கும்.
நமக்கு நாமே ஆறுதல் கூறும் மனதைரியம் இருந்தால் எதையும் கடந்து போகலாம். வாழ்வில் அனைத்து விஷயத்திலும் வெற்றி பெற்று விட உதவும் ஒரே ஆயுதம் எதிர்கொள்ளும் தோல்வியை சமாளிப்பதில்தான் அடங்கியுள்ளது. சிந்திப்பது மனது. செயல்படுத்துவது அறிவு. முயற்சி செய்து சாதிக்க வேண்டியது நாம்.
அதற்கு தோல்வியை துரத்தி அடிக்கும் துணிவு வேண்டும். எந்த செயலை எப்படி செய்தால் தோல்வி ஏற்படுகிறதோ, அந்தச் செயலை மாற்றி செய்ய பழகவேண்டும். இன்னும் வித்தியாசமான முறையில் எப்படி எல்லாம் அதை திருத்தமாகச் செய்தால் வெற்றிபெற முடியும் என்ற விடாமுயற்சியை கைக்கொள்ள வேண்டும். அந்த விடா முயற்சிதான் தோல்வியை துரத்தி அடிக்கும் ஆயுதம்.
வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக நேரம் எதுவும் இல்லை. தோல்வியைக் கண்டு அஞ்சாதவர்கள் இடத்தில், விடாமுயற்சியோடு செயல்படுகிறவர் களிடத்தில், அதை துரத்தி அடிக்கும் யுத்தியை தெரிந்து கொண்டவர்கள் இடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து குவியும் என்பது உறுதி.