பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு: மாற்றுத்திட்டம் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சத்துணவை நம்பியிருக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சமைத்த சத்தான உணவை வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘‘9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டதால் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. வருகிற நவம்பவர் 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால், முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படும்’’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘மோசமான நிலையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை கொரோனா பேரிடர் காலம் மனித குலத்துக்கு கற்றுக்கொடுத்துள்ளது. இயற்கை சீற்றங்கள், பேரிடர்களின் போதும், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அவசர கால மாற்றுத்திட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அவசர காலத்தில் சத்துணவு வழங்குவதற்கான மாற்றுத்திட்டங்கள் என்ன உள்ளது? என்பது குறித்தும், சத்துணவு வழங்கப்பட்டது குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.