புதிய கல்வி கொள்கை வகுக்க உயர்மட்டக் குழு உருவாக்கப்படும் கல்வி அமைச்சர்
தமிழகத்துக்கு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, விரைவில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சி, திருவெறும்பூரில் அவர் அளித்த பேட்டி : மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காது என்பதில், முதல்வர் உறுதியாக உள்ளார். அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தமிழகத்துக்கு தனியாக கல்விக் கொள்கை உருவாக்க, விரைவில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.கொரோனா காலத்தில் இடைநின்ற 1.28 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளோம்.
இல்லம் தேடி கல்வித் திட்டம், முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். பின், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும்.இத்திட்டத்தில் எந்த பிரச்னையும் வராமல் இருக்க, தன்னார்வலர்களை நான்கு கட்ட தேர்வுகளுக்கு பின்னரே நியமிக்க உள்ளோம்.கொரோனா காலத்தில், மாணவர்கள் படிக்காததை நினைவூட்டவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின், இன்று பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளியைக் கண்டு சோர்வடையக் கூடாது என்பதில் அக்கறையாக செயல்பட, கல்வித் துறை அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.