மாணவர்கள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள சி.பி.எஸ்.இ அனுமதி
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் பள்ளி இருக்கும் நகரிலேயே முதற்கட்ட தேர்வுக்கான மையத்தை மாற்றிக் கொள்ளலாம்' என சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வு, முறையே, நவ.,30 மற்றும் டிச.,1ல் நடக்க உள்ளது. இதில், பல மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும்பள்ளி அமைந்துள்ள நகரை விட்டு வேறு நகரில் உள்ளதேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தங்களுக்கு வேறு நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தால், அது குறித்து பள்ளி நிர்வாகத்தை அணுகி, தேர்வை மையத்தை மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அதன் வலைதளத்தில் வெளியிடும் உத்தரவுகளை பின்பற்றி, பள்ளி நிர்வாகம் தேர்வு மையங்களை மாற்றும். அதனால் அனைத்து மாணவர்களும் சி.பி.எஸ்.இ., வலைதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.