மழையால் புத்தகம் சேதம் புதிதாக வழங்க கோரிக்கை
வட கிழக்கு பருவ மழை வெள்ளப் பெருக்கால், பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, மீண்டும் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை முதல் குமரி வரை, பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசித்த பொதுமக்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.இந்நிலையில், மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில், சென்னை துவங்கி பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மாணவ - மாணவியர், தங்களின் பாட புத்தகங்களை இழந்து உள்ளனர்.
பாட புத்தகங்கள் மழையில் நனைந்து, கிழிந்து சேதமாகியுள்ளன.எனவே, மழை வெள்ளம் குறைந்த பின், பள்ளிகளுக்கு செல்லும் போது, பாட புத்தகம்வேண்டுமே என்ற கவலையில் உள்ளனர்.இதை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியரில், வெள்ளப்பெருக்கில் புத்தகங்களை இழந்தவர்களுக்கு, புதிய புத்தகங்களை இலவசமாக வழங்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.