10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி விண்ணப்பிக்க டிசம்பர் 3 கடைசி நாள்
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சி தேர்வுக்கு, டிசம்பர் 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு கல்வி ஆண்டுக்கான, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், தங்கள் பெயரை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். முதன்முறையாக அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுதுவோர்; 2012க்கு முன் பழைய பாட திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றோர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, பெயரை பதிவு செய்ய வேண்டும்.
நவம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 3க்குள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கும் பள்ளிகளுக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு, 80 சதவீதம் வருகை தந்த தனி தேர்வர்கள் மட்டுமே பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள், மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, செய்முறை தேர்வு நடத்தும் நாட்கள் மற்றும் மைய விபரம் அறிந்து, செய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும்.கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தை, https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1636720470.pdf என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல் எடுத்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது