மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க கோரிக்கை
கன மழை மற்றும் பேரிடர் காலங்களில், அரசு துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும்' என தமிழக அரசுக்கு, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலர் கோபிநாத் கூறியதாவது: கன மழை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளை தவிர்த்து, சென்னையில் உள்ள மற்ற அரசு அலுவலகங்களுக்கு, நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் அனைத்து துறை மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளின் நடைமுறை பிரச்னைகள், சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பெருமழை மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பு விடுமுறை அளித்து முதல்வர் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவு, தலைமை செயலர், சம்பந்தப்பட்ட துறையினருக்கு சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.