தேசிய திறனாய்வு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்க கோரிக்கை
கல்வி உதவி தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், எட்டாம் வகுப்பு படிப்போராகவும், பெற்றோரின் ஆண்டு வருவாய், 1.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.அதேபோல, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில், தேசிய திறனாய்வு தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக, மாநில அளவில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர், தேசிய அளவிலான தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.தேர்ச்சி பெறுவோரில் முன்னிலை இடம் பெறும் 466 பேர், கல்வி உதவித்தொகை பெற தகுதி பெறுவர். பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
இந்த தேர்வுக்கான அறிவிக்கையை, கடந்த வாரம் அரசு தேர்வு துறை வெளியிட்டது. அதில், விண்ணப்பம் சமர்ப்பிக்க, 13ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, பள்ளிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை. இதனால், மாணவர்கள் உரிய காலத்தில் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத சூழல் உள்ளது.
எனவே, தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்குமாறு, பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.-