அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ.,க்கு பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சுயநிதி பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை, முப்பருவ பாடத் திட்டம் அமலில் உள்ளது.மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு முழுமைக்குமான, ஒரே பாட புத்தகம் வழங்கி பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளி சமச்சீர் கல்வி மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து கொள்ள, மத்திய அரசின் சார்பில், தேசிய கற்றல் திறனாய்வு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்று, ஐந்து, எட்டு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு நவம்பர், 12ம் தேதி நடத்தப்படுகிறது.தேர்வை தேசிய கல்வியியல் பாடத்திட்டத்தின்படி, சி.பி.எஸ்.இ., நடத்த உள்ளதால், அரசு அனுமதி அளிக்குமா என்று ஆசிரியர்கள் சந்தேகத்தில் இருந்தனர்.ஆனால், புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், சி.பி.எஸ்.இ., நடத்தும் தேசிய கற்றல் திறனாய்வுக்கான என்.ஏ.எஸ்., தேர்வை நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.