ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்ககல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்படவேண்டிய 2582 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.
முன்னதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் (Graduate Teachers/Block Resource Teacher Educators) 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த 25ம் தேதி அன்று வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற சென்னை இடைக்கால தீர்ப்பாணையின்படியும் மற்றும் மிக்ஜாம் புயல் மழையின் காரணமாகவும் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 07.12.2023 -லிருந்து 13.12.2023 மாலை 5 மணி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 14.12.2023 மற்றும் 15.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகிறது