‛டிஜிலாக்கர்' சான்றை ஏற்றுக்கொள்ள கல்லூரிகளுக்கு உத்தரவு
மத்திய அரசின் டிஜிலாக்கர் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் நிராகரிக்காமல் ஏற்க வேண்டும் என யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
பட்டப்படிப்பு சான்றிதழ்கள், காப்பீட்டு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் வாயிலாக பெற்று, அதை 'டிஜிட்டல்' முறையில் பத்திரப்படுத்தி வைப்பதற்கான டிஜிலாக்கர் என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இந்த செயலியை உருவாக்கியது.
இதில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் வினியோகிக்கும் அமைப்பிடம் இருந்து நேரடியாக பெறப்படுவதால், இதை அதிகாரப்பூர்வ ஆவணங்களாக கருதும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.இதில் கல்வி நிலையங்கள் மாணவர்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய, நாட் எனப்படும் தேசிய கல்வி பெட்டகம் என்ற இணையதளம் உள்ளது. மாணவர்களின் பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் பட்டியல் போன்ற டிஜிட்டல் ஆவணங்கள் இதன் வாயிலாக வினியோகிக்கப்படுகின்றன
இந்நிலையில், டிஜிலாக்கர் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் நிராகரிக்காமல் ஏற்க வேண்டும் என யு.ஜி.சி., உத்தரவு பிறப்பித்துள்ளது.