துவக்க, நடுநிலைப்பள்ளி திறப்பு செப்டம்பர் 30ல் முடிவு
தமிழகத்தில் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து செப்.,30ம் தேதி முடிவு செய்யப்படும்,'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் கேரளாவை ஒட்டிஉள்ளன. கேரளாவில் தொற்று அதிகம் இருப்பதால் அங்குள்ள பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர் மற்றும் திருச்சி, வேலூர் போன்ற பகுதிகளிலும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
ஒரு சாரார் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் என்றும், ஒருசாரார் 5 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்.,30ம் தேதி முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.