ஒழுக்கம், சுயகட்டுப்பாடு மட்டுமே ஒரு மனிதனை உயர்த்துகிறது

ஒருவா் படித்து பட்டத்தை கையில் வைத்திருப்பதால் மட்டும் மாற்றம் நடந்துவிடாது. இந்த உலகம் வல்லவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது, சான்றிதழ் வைத்திருப்பவரை அல்ல.
சமூகம் தேடும் மனிதராக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். அதற்கு நாம் நம் சிந்தனையை நடத்தையை, செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் சாதாரணமாக வருவதில்லை. ஆழ் மனத்தில் உருவாக்கப்படும் ஒரு தீப்பொறியாகும்.
இதைத்தான் சுவாமி விவேகானந்தா் ‘எழுமின் விழிமின்’ என்கிறாா். இதன் பொருள் ஆன்மாவை எழச் செய்வது. விழிப்புடன் ஆழ்மனத்தை செயல்பட வைப்பது.
இவற்றின் மூலம் நம் மேம்பாட்டுப் பணிகளை குறிக்கோளை அடையும்வரை தங்கு தடையின்றிச் செய்து கொண்டேயிருப்பது. இவை அனைத்தும் சாதனைக்கான மனோபாவம்.
சாதனை புரிய வேண்டும் என்ற அவா நம் நடத்தையையும் செயல்பாடுகளையும் மாற்றியமைத்து விடுகிறது. இந்த மாற்றங்களை நம்மிடம் கொண்டுவருவது என்பது ஒரு வேள்விபோல் நடைபெறும் நிகழ்வாகும்.
இந்த மாற்றங்களை நிகழ்த்த தனிமனிதா்களாகிய நாம் ஒவ்வொருவரும் மூன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த ஒழுக்கங்களை நம் சிந்தனையில், நடத்தையில், செயல்பாடுகளில் கொண்டுவர வேண்டும்.
உடலும் மனமும் ஒழுக்கமாகிவிட்டால் நாம் செய்யும் செயல்கள் சிறப்பாக அமைந்துவிடும். மனத்தை ஒழுக்கப்படுத்துவது என்பது, சிந்தனைப்போக்கை நாம் செலுத்தும் திசையில் செல்ல வைக்க முயல்வது.
அதற்கு யோகா, தியானம், என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. யாருக்கு எது விருப்பமோ அதைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். அடுத்து உடலை ஒழுக்கமாக்கிக்கொள்ள வேண்டும். உடல் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் அதை பயிற்சியின் மூலமே செய்திட வேண்டும்.
உடல் மனம் இந்த இரண்டும் ஒருவனின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், அவன் மிகப்பெரிய ஆற்றல் உள்ளவனாக மாறிவிடுவான். அவன் செய்கின்ற அனைத்தும் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவன் செய்கின்ற செயல் அனைத்தும் யோகமாகிவிடும்; வேள்வியாகிவிடும்;
தவமாக மாறிவிடும்.
"இரத்தக்கண்ணீர்" என்னும் பழையத் திரைப்படப்பாடல் வரிகள், "குற்றம் புரிந்தவன் வாழ்வில் நிம்மதியென்பது கொள்வதேது?? ", என்ற வரிகளுக்கு ஏற்பத் துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்..
இவற்றிற்கான காரணங்கள் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தாமை. நல்லறிவு இருந்தும் அதைப் பயன்படுத்தாமை... என்பனவாகும்.... சிந்தித்துப் பாருங்கள்... தெளிவு பிறக்கும்....