தமிழக கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் வழியே வகுப்புகள் நடந்தன. தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ - மாணவியருக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விடுதியில் உள்ள மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ளாமல் 14 நாட்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதுபற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின், மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் முழுவதும், கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவு அருந்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.