அரசு ஊழியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுருத்தல்
ஆசிரியர், அரசு ஊழியருக்கான புதிய காப்பீட்டு திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது தமிழகத்தில் 12 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர் யுனைடெட் இந்தியா நிறுவன காப்பீட்டு திட்டத்தில் ஏற்கெனவே உள்ளனர். இதற்காக சம்பளத்தில் மாதம் தலா ரூ.180 பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 1 முதல் புதிய காப்பீட்டு திட்டம் (என்.ஹெச்.ஐ.எஸ்.,) அமல்படுத்தப்பட்டு மாதம் தலா ரூ.300 ஆக பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது.இத்திட்டம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
உரிய அதிகாரிகள் பொறுப்புடன் பதில் சொல்வதில்லை. மேலும் எம்.டி., இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 18 மாவட்டங்களும், மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 20 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் காப்பீட்டு தொகை பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மெடி அசிஸ்ட் நிறுவனம், சிகிச்சை பெறுவோருக்கு மிகக் குறைவான தொகை வழங்குகிறது. உரிய நேரத்தில் தொகை கிடைப்பதில்லை.அரசு உத்தரவில் 'பணமில்லா சிகிச்சை' என குறிப்பிடப்பட்டிருந்தாலும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற முடியவில்லை.
'பேக்கேஜ்' என்ற முறையில் ஒரு நோய்க்கு இவ்வளவு தான் தொகை தர முடியும் என்பதையும் ஏற்க முடியாது. எனவே நிறுவனங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.பணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தி, 24 மணிநேரம் அனுமதித்து சிகிச்சை பெற்றாலே மருத்துவமனைக்கான செலவு தொகையை செலுத்தும் வகையில் புதிய திட்டத்தில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.