குறைகளை நிறைகளாக மாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்!
எந்நேரமும் அடுத்தவர்களிடம் குறைகளை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் என்னதான் குறை இருந்தாலும் அதை நிறையாக மாற்ற கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.
ஜப்பானில் உள்ள கடைத்தெருவில் தேநீர் கோப்பைகள் விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தது. அந்த கடையின் உரிமையாளர் என்னதான் திறமையாக வியாபாரம் செய்தாலும், அவருக்கு ஒரு மனக்குறை இருந்தது. அது என்னவென்றால், இவருக்கு பிறகு இந்த கடையை எடுத்து நடத்த சரியான ஆட்கள் இல்லை என்பதேயாகும். அவருடைய மனைவி மற்றும் மகன்களுக்கு எதையும் சரியாக செய்யும் அளவிற்கு திறமையில்லை என்பது இவருடைய எண்ணமாகும்.
இப்படி போய்க்கொண்டிருக்க அங்கிருக்கும் மடாலயத்தில் இருந்து ஒரு துறவி தேநீர் கோப்பைகள் வாங்குவதற்காக இவருடைய கடைக்கு வருகிறார். அவரை பார்த்த வியாபாரியோ தன் மனக்குறையை அவரிடம் கொட்டுகிறார். அவர் சொன்னதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த துறவி தங்களுடைய மடாலயத்தில் தேநீர் விருந்து நடக்கவிருக்கிறது. அதற்காக தாங்கள்தான் வந்து மேஜையை அலங்கரித்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதை கேட்ட வியாபாரி அதற்கு சம்மதிக்கிறார். தேநீர் விருந்தில் சரியாக நூறு கோப்பைகள் இருக்கின்றன. ஒன்று கூட கூடுதலாக இல்லை. எனவே, வியாபாரி தேநீர் கோப்பைகளை கண்ணும் கருத்துமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இருப்பினும், கைத்தவறி ஒரு கோப்பை கீழே விழுந்து அதில் விரிசல் ஏற்பட்டது. இப்போது வியாபாரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
தேநீர் விருந்து தொடங்கும் நேரம் நெருங்கிவிட்டது. அப்போதுதான் வியாபாரிக்கு ஒரு யுக்தி நினைவிற்கு வந்தது. ஜப்பானியர்கள் அவர்களிடம் இருக்கும் உடையக்கூடிய பொருட்களில் விரிசல் ஏற்பட்டால் அதை தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை பயன்படுத்தி நிரப்பி சரிசெய்து மறுபடியும் பயன்படுத்துவார்கள். அந்த யுக்தி நினைவிற்கு வர வியாபாரியும் தன்னிடமிருந்த வெள்ளி துகள்களை அந்த விரிசில் விட்ட தேநீர் கோப்பையில் வைத்து நிரப்பி அந்த விரிசலை அடைக்கிறார்.
இப்போது நேநீர் விருந்தின்போது சரியாக மடாலயத்தின் தலைமை குரு அந்த விரிசல் விழுந்த கோப்பை இருக்கும் இடத்தில் அமர்கிறார். தேநீர் ஊற்றி பருகும்போது அந்த கோப்பையின் விரிசலை கவனிக்கிறார் தலைமை குரு. அதை செய்தது வியாபாரிதான் என்பதை தெரிந்துக் கொள்கிறார்.
இப்போது மடாலயத்தின் தலைமை குரு சொல்கிறார், ‘எப்படி இந்த விரிசல் விழுந்த தேநீர் கோப்பையை வெள்ளியை கொண்டு நிரம்பி அதன் குறைகளைப் போக்கினாயோ? அதைப்போல உன் குடும்பத்தில் இருப்பவர்களின் குறைகளை எண்ணி வருந்திக்கொண்டே இருக்காமல், அதை அன்பால் நிரப்பக் கற்றுக்கொள்வது அவசியமாகும்’ என்று கூறினார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, அடுத்தவர்களிடம் குறைகள் இருக்கிறது என்று சொல்லி வருந்தாமல் அதை அன்பு என்ணும் நிறையால் நிரப்பினால் வாழ்க்கை வளமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.