குழந்தைகளின் வழிகாட்டிகள் பெற்றோர்கள்தான்! பெற்றோர்களை நகலெடுத்தே குழந்தைகள் வளர்கிறார்கள்!!
அமைதி தவழும் இல்லம் இறைவன் வாழும் இல்லம். வீட்டுக்குள் நுழைந்த உடன் நிம்மதியும் அமைதியும் கிடைக்காவிட்டால் அது இல்லம் இல்லை. குற்றங்களை உற்றுப் பார்க்கும் உருப்பெருக்கியன்று குடும்பம். மகிழ்வலைகள் குடும்பத்தை மேம்படுத்துகின்றன.
கணவன் மனைவி உறவுஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் கணவன் மனைவி உறவே குடும்பத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது. மனைவிக்கு கணவன் மீது மரியாதை, கணவனுக்கு மனைவி மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே இல்லம் இனிய சொர்க்கமாக அமையும்.
ஆனால் இன்று திருமணம் பேசும்போதே மணமகனின் தாய் தந்தையர் தங்களோடு இருக்கக்கூடாது என்று கேட்கும் பெண்பிள்ளைகள், வருகிற பெண்ணைக் கொடுமைப்படுத்தி அல்ப சந்தோஷம் அடையும் மாமியார்களால் குடும்ப அமைப்பு ஆடிக்கொண்டிருக்கிறது.
உறவுவலையை அறுத்தெறியும் கூர்கத்தி நம் கோபம்தான்.சினத்தைச் சிந்தியதால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை! பொறுக்கவும் பிடிக்காமல் இருக்கவும் பிடிக்காமல் வெறுப்பைச் சிந்தி வெட்டவெளியான குடும்பங்கள் ஆயிரம்ஆயிரம். திருமணமான ஒரே ஆண்டுக்குள் தானே பெரியவர் என்கிற தன்முனைப்பால் விவாகரத்தை நோக்கி நீதிமன்றம் நகரும் தம்பதியர் கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறது.
மகிழ்ச்சி இல்லா குடும்பங்கள் மரண வீடுகளுக்கு ஒப்பானது.ஆயிரம் காலத்துப் பயிர் கண் எதிரே கருகிக்கொண்டிருக்கிறது. குடும்பம் என்பது செங்கலால் கட்டப்பட்ட கட்டடத்தில் நடக்கும் இல்லறம் மட்டுமல்ல, அது அன்பான உள்ளங்கள் உள்ளன்போடு வாழும் அன்பு ஆலயம்.
பெற்றோர்உறவுகளின் உன்னதத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அளவுகடந்த பாசத்தின் காரணமாக குழந்தைகளைக் கண்டிக்காமல் விட்டால் அக்குழந்தைகள் வழிதவறிச்செல்லும். வீட்டின் வலியையும் வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். உங்கள் கனவுமூட்டைகளைச் சுமக்கும் சுமைதாங்கியல்ல குழந்தைகள்.
குழந்தைகளோடு மனம்விட்டுப் பேசுங்கள். அன்பைக் கொட்டி வளர்க்கும் இல்லம் பாசத்தை வளர்க்கும் உள்ளம். சரியாக வளர்க்கப்படாத குழந்தைகள் சமூகத்தின் நச்சுமரங்களாக மாறுகின்றன. அலைபேசியின் தொடுதிரைகளுக்குள்ளாகத் தொலைந்து கிடக்கிற இளைய சமுதாயத்திற்கு யதார்த்தத்தைக் கற்றுத் தரவேண்டியவர்கள் பெற்றோர்கள்.