எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான்
பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் ‘எல்லை காந்தி’ என்று போற்றப்பட்டவருமான கான் அப்துல் கஃபார் கான் (Khan Abdul Ghaffar Khan) பிறந்த தினம் பிப்ரவரி 6.
பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் என்ற கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ளது) 1890-ல் பிறந்தார். பஷ்தூன் எனப்படும் பழங்குடியினப் பிரிவை சேர்ந்தவர். தந்தை நில உரிமையாளர்.
எட்வர்டு மிஷன் பள்ளியிலும், பின்னர் அலிகார் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பஷ்தூன் மக்கள் கல்வியறிவு இல்லாமல் அறியாமை, வறுமையில் வாடுவதைக் கண்ட இவர் 20-வது வயதில் அவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் திறந்தார். அவர்கள் வாழும் 500 கிராமங்களில் பயணம் மேற்கொண்டார்.
காந்திஜியின் அஹிம்சைக் கொள்கைகளாலும் போராட்ட முறைகளாலும் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். 1919-ல் ஆங்கில அரசை எதிர்த்து இவர் கூட்டிய பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் திரண்டனர். கிலாபத் இயக்கத்தில் இணைந்தார். அப்போது நாடு முழுவதும் இந்து - முஸ்லிம் கலவரங்கள் நடந்தன. ஆனால், தன் பகுதியில் எந்த மோதலும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்.
‘அஞ்சுமான்’ என்ற அமைப்பை உருவாக்கினார். அதன்மூலம் தன் இன மக்களுக்கு கல்வி கற்பித்தல், அன்பு வழியை போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். ‘‘இந்த பணிகளும் எனக்கு தொழுகை போன்றதே’’ என்று கூறுவாராம்.
கீதை, குருகிரந்த சாஹிப், பைபிள் உட்பட பல்வேறு மதங்களின் புனித நூல்களைப் படித்தார். ‘பக்தூன்’ என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார். அதில் சமூக சீர்திருத்தம் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். காந்திஜியுடன் இதயபூர்வமான நட்புறவைக் கொண்டிருந்தார்.
தனது அமைப்பை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸ் தலைவர் பதவி அவரைத் தேடி வந்தபோதும், மறுத்துவிட்டார். ‘குதாய் கித்மத்கர்’ என்ற அமைதி இயக்கத்தை 1929-ல் தொடங்கினார். சமூக சீர்திருத்தத்துக்கும் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த அமைப்பு உறுதிபூண்டது.
இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். தேசப் பிரிவி னையை எதிர்த்தார். சமுதாய மாற்றம், மத நல்லிணக்கம், நியாய மான நிலப் பங்கீடு போன்ற கொள்கைகளால் மதத் தலைவர்கள், நிலச்சுவான்தார்களின் அதிருப்திக்கு ஆளானார். பிரிவினைக்குப் பிறகு, இவரது இயக்கத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. ஆனாலும் மனம் தளராமல் தன் பணியைத் தொடர்ந்தார்.
இஸ்லாமும் அஹிம்சையும் ஒன்றிணைந்தது என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் இந்தியாவிலும், பாகிஸ்தானிலுமாக தன் வாழ்நாளில் சுமார் 52 ஆண்டுகளை சிறையிலும் வீட்டுக் காவலிலும் கழித்தவர்.
பெண் கல்வி, மகளிர் சமத்துவத்தை வலியுறுத்தினார். எளிமையாக வாழ்ந்தார். இருதரப்பு கொள்கைகளில் நடுநிலையுடன் நடந்துகொண்டதால், இந்திய உளவாளி என தூற்றப்பட்டார்.
இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது 1987-ல் வழங்கப்பட்டது. இந்த பரிசை வாங்கிய முதல் வெளிநாட்டவர் இவர்தான். ‘பாட்ஷா கான்’ என்றும் ‘எல்லை காந்தி’ என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் 98-வது வயதில் (1988) மறைந்தார்.