எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு
தமிழ்த்திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் சத்ய பாமா. இவர்களது முன்னோர்கள், கொங்கு நாட்டிலிருந்து கேரளாவில் குடியேறிய மன்றாடியார்கள் என்று எம்.ஜி.ஆரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றியவர், கோபாலமேனன். நீதி தவறாதவர். அநீதிக்குத் துணை போக மறுத்ததால், வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதனால் வேதனை அடைந்த கோபால மேனன் பதவியை ராஜினாமா செய்தார்.
மனைவியுடன் இலங்கை சென்றார். கோபாலமேனன் சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்த போது, 1917ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார்.
அந்த இடம், தமிழில் "பச்சைக்காடு" என்று அழைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில் இப்போது ஒரு பாடசாலை நடந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற இரண்டு தமக்கைகள். நான்கு குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர் எம்.ஜி.ஆர். பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர்.
சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் கோபால மேனனும், சத்யபாமாவும் மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தனர். எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார், கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம், ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது. 1920ம் ஆண்டில், கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
அப்போது எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது. கணவரை இழந்த சத்யபாமா, தன் இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்குவது எப்படி என்று திகைத்தார். அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தார்கள். ஆகவே, தன் இரு மகன்களுடன் கும்பகோணத்துக்கு வந்தார், சத்தியபாமா. நாராயணன், இளம் வயதிலேயே கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து குடியேறியவர்.
கும்பகோணத்தில் தங்கி, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ்" நாடகக் கம்பெனியில் பின்பாட்டுப் பாடிப் பிழைத்து வந்தார். குழந்தைகளுடன் ஆதரவு தேடி வந்த அக்காவுக்கு அவர் ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார். கும்பகோணம் ஆணையடிப்பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள். எம்.ஜி.ஆரை விட சக்ரபாணி நான்கு வயது மூத்தவர். எனவே, குடும்ப நிலைமையை ஓரளவுக்கு உணர முடிந்தது.
பள்ளிக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சிறு சிறு வேலைகள் செய்து, கொஞ்சம் பணம் சம்பாதித்தார். இலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை, வாழ்க்கைச் சக்கரம் சிக்கலின்றி சுழன்றது. அதன்பிறகு, தன் குழந்தைகளை வளர்க்க சத்ய பாமா மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. `எப்படியும் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்' என்ற உறுதியுடன் சோதனைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டார்.
சத்யபாமாவின் கஷ்டத்தைப் போக்க, நாராயணன் ஒரு யோசனை தெரிவித்தார். "அக்கா! சக்ரபாணியும், ராமச்சந்திரனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டால், விரைவில் முன்னுக்கு வந்து விடுவார்கள்" என்றார். அப்போது எம்.ஜி.ஆருக்கு 7 வயது. அவர் மூன்றாம் வகுப்பும், சக்ரபாணி ஏழாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க சத்தியபாமா விரும்பினார்.
ஆனால் குடும்ப சூழ்நிலை அதற்கு இடம் தர வில்லை. எனவே, வேறு வழியின்றி பிள்ளைகளை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தது. அங்கு எம்.ஜி.ஆரையும், சக்ரபாணியையும் அழைத்துச் சென்று சேர்த்து விட்டார், நாராயணன். அப்போது இந்த நாடகக் கம்பெனியில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தார்கள்.
முதலில் சிறு வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர், சில ஆண்டுகளுக்குப்பின் கதாநாயகனாக உயர்ந்தார். இந்த சமயத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின. 1935ம் ஆண்டு, எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான வருடம்.
பிற்காலத்தில் ஜெமினி ஸ்டூடியோவைத் தொடங்கி சாதனைகள் புரிந்த எஸ்.எஸ்.வாசன், தமது "ஆனந்த விகடன்" பத்திரிகையில் எழுதிய "சதிலீலாவதி" என்ற கதையை, வேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்தது. படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா. இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தமானார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர். எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகிய நால்வருக்கும் இது முதல் படம். அமெரிக்காவில் இருந்து தமிழகம் வந்து, பிற்காலத்தில் "அம்பிகாபதி", "மீரா", "சகுந்தலை" போன்ற அற்புதப் படங்களை இயக்கியவரான எல்லிஸ் ஆர்.டங்கன்தான் இப்படத்தின் இயக்குனர்.
28.3.1936 ல் "சதி லீலாவதி" வெளியாகியது. படத்தின் முடிவு எப்படி இருக்குமோ என்று அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். படம் பெரும் வெற்றி பெற்று, அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நல்ல பெயரைத் தேடித்தந்தது. அப்போது எம்.ஜி.ஆருக்கு 19 வயது. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்குக் கிடைத்த சம்பளம் நூறு ரூபாய்.
முழு நூறு ரூபாய் நோட்டை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தார். மகிழ்ச்சி தாங்கவில்லை. நூறு ரூபாயை அப்படியே அம்மா கையில் கொண்டு போய்க் கொடுத்து ஆசி பெற்றார். எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் "இரு சகோதரர்கள்". இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடியது.
தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார், எம்.ஜி.ஆர். அவருக்குத் திருமணம் செய்து வைக்க சத்தியபாமா விரும்பினார். "நடிப்புத்துறையில் முன்னேறிய பிறகுதான் திருமணம்" என்று எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால், தாயார் விடாப்பிடியாக வற்புறுத்தவே எம்.ஜி.ஆர். சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கிற தங்கமணியை எம்.ஜி.ஆருக்கு மணம் முடித்து வைத்தார், சத்தியபாமா.
அழகும், குணமும் ஒருங்கே அமைந்திருந்த பார்க்கவி மீது உயிரையே வைத்திருந்தார், எம்.ஜி.ஆர். ஆனால், தாய் வீடு சென்றிருந்த பார்க்கவி திடீரென்று காலமானார். அப்போது எம்.ஜி.ஆர். வெளியூரில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். மனைவி மறைவுச் செய்தியைத் தாங்கி வந்த தந்தி, அவரை இடிபோல தாக்கியது.
நொறுங்கிய இதயத்துடன், உடனே பாலக்காடு புறப்பட்டார். போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத காலம் அது. எம்.ஜி.ஆர். போய்ச்சேருவதற்குள், பார்க்கவியின் உடல் அடக்கம் முடிந்து விட்டது. மனைவியின் முகத்தை கடைசி முறையாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர். அலறித் துடித்தார். மனைவியைப் பிரிந்த துயரம் அவரை வெகுவாக பாதித்தது.
ஒரு துறவிபோல் வாழ்ந்தார். மகன் கிட்டத்தட்ட சாமியார் போல ஆகிவிட்டதைக் கண்டு கலங்கினார், சத்யா அம்மையார். எம்.ஜி.ஆருக்கு மறுமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும் என்று நினைத்தார். இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் பேசினார். "பார்க்கவியுடன் வாழ எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.
எனக்கு எதற்கம்மா இன்னொரு கல்யாணம்?" என்று விரக்தியுடன் கூறினார், எம்.ஜி.ஆர். "பார்க்கவியைப் பறிகொடுத்தது நம் துரதிர்ஷ்டம்தான். என்றாலும், நீ வாழ்க்கையே வெறுத்துப்பேசுவது நல்லதல்ல. அது உன் மனதையும், உடல் நலத்தையும், எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே, அவள் இடத்தில் இன்னொரு பெண்ணை அமர்த்துவதுதான் நல்லது" என்று எடுத்துச்சொன்னார்.
"உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று அரை மனதுடன் கூறினார், எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு மீண்டும் பெண் பார்த்தார், சத்யபாமா. பாலக்காட்டுக்கு அருகே உள்ள குழல்மன்னம் என்ற இடத்தைச் சேர்ந்த கடுங்கநாயர் மூகாம்பிகை அம்மாள் தம்பதிகளின் மகளான சதானந்தவதியைப் பார்த்து முடிவு செய்தார்.
பார்க்கவி போல் சதானந்தவதி அழகானவர் அல்ல. சுமாரான நிறம்; சுமாரான தோற்றம். ஆனால் சாதுவான குணம். பொறுமைசாலி. எம்.ஜி.ஆர். சதானந்தவதி திருமணம் 1942ம் ஆண்டு ஆனி மாதம் 16ந்தேதி நடந்தது. திருமணம் முடிந்தபின், 10 மாத காலம் தாயார் வீட்டிலிருந்தார், சதானந்தவதி.
எம்.ஜி.ஆர். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு வீட்டை மாதம் 25 ரூபாய் வாடகைக்கு ஏற்பாடு செய்தபின், மனைவியை அழைத்து வந்தார். சதானந்தவதி, முதல் முறை கர்ப்பம் தரித்தபோது, காச நோய் பற்றிக்கொண்டது. அதற்கு சிகிச்சை அளித்தபோது, பல "எக்ஸ்ரே"க்கள் எடுக்கப்பட்டன.
அப்போது, அவருடைய வயிற்றில் உருவாகியிருந்த கரு, கர்ப்பப்பைக்கு வெளியே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அது அப்படியே மேலும் வளர்ந்தால், தாயின் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் கருதினார்கள். எனவே, ஆபரேஷன் மூலம் கரு அகற்றப்பட்டது. இதனால் சதானந்தவதியின் உடல் நிலை, மேலும் நலிவடைந்தது. காச நோயுடன் இதயக்கோளாறும் ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பிறகு குணம் அடைந்தார்.
1947ல், மாதம் 170 ரூபாய் வாடகைக்கு அடையாறில் ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர். அங்கு வசித்தபோது, அன்னை சத்யா அம்மையார் காலமானார். அந்தத் துயரத்திலிருந்து எம்.ஜி.ஆர். மீள வெகு காலம் பிடித்தது. 1950 ம் ஆண்டில், சதானந்தவதிக்கு இரண்டாவது முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது.
அதன்பின், அவர் படுத்தபடுக்கையானார். 1962ல் அவர் மறையும் வரை அவர் நோயாளியாகவே இருந்து, மருந்து மாத்திரைகளுடன் வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். தன் மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். ஏறத்தாழ 20 ஆண்டுகள் சதானந்தவதியுடன் இல்லறம் நடத்தியபோதிலும், அவர் `கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'யாகவே வாழ்ந்தார்.
இல்லற வாழ்க்கையில் எம்.ஜி.ஆர். சோதனைகளைச் சந்தித்த வேளையில், பட உலகில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். "வீரஜெகதீஷ்" படத்துக்குப்பின், "மாயா மச்சீந்திரா", "பிரகலாதா", "சீதா ஜனனம்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1941ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு "அசோக்குமார்" படத்தின் மூலமாக கிடைத்தது.
எம்.ஜி.ஆரின் ஆரம்பகாலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் "அசோக்குமார்". அதில் தளபதி வேடத்தில் நடித்தார். பாகவதர் தன் கண்களைக் குருடாக்கிக்கொள்ளும் உருக்கமான கட்டம். பாகவதருக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்தார், எம்.ஜி.ஆர். "யார் அந்த துடிப்பான இளைஞர்?" என்று ரசிகர்கள் கேட்டனர்.
அசோக்குமாரைத் தொடர்ந்து "தமிழறியும் பெருமாள்", `தாசிப்பெண்", "ஹரிச்சந்திரா" (ஜெமினி), "சாலிவாகனன்", "மீரா", "ஸ்ரீமுருகன்" முதலிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்படாத காலகட்டம் அது. சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும். அழகும் திறமையும் உள்ள எம்.ஜி.ஆர், கதாநாயகனாக உயரமுடியாமல் போனதற்கு அதுதான் காரணம்.
1946ல் பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது. 1947ம் ஆண்டு, இந்தியாவின் வரலாற்றில் எப்படி முக்கியமானதோ, அதுபோல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. எம்.ஜி.ஆர்., முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" படம், அந்த ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி வெளியாயிற்று.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர் கே.மாலதி. மற்றும் டி.எஸ்.பாலையா, "இலங்கைக் குயில்" தவமணி தேவி ஆகியோரும் நடித்தனர். டைரக்ட் செய்தவர் ஏ.எஸ்.ஏ. சாமி. வசனம் எழுதியவர் மு.கருணாநிதி என்றாலும், படத்தில் அவர் பெயர் போடப்படவில்லை. வசனம் எழுதியவர் என்று, டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி பெயரே டைட்டிலில் இடம் பெற்றது.
எம்.ஜி.ஆருக்கு பின்னணியில் பாடியவர் எம்.எம்.மாரியப்பா. பின்னர் "மோகினி" என்ற படத்தில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். அவர்கள் இணைந்து நடித்த முதல் படம் இது. எம்.கே.தியாகராஜபாகவதர் "ராஜமுக்தி" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.
படத்தின் கதாநாயகி வி.என்.ஜானகி. இந்தப் படத்தில் பாகவதருக்கு அடுத்த முக்கிய வேடத்தில் வீரதளபதியாக எம்.ஜி.ஆர். நடித்தார். படப்பிடிப்பு, புனாவில் பல மாதங்கள் நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆருக்கும், ஜானகிக்கும் காதல் அரும்பியது. 1949ல், கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான "மருதநாட்டு இளவரசி" படத்தில் எம்.ஜி.ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.
அப்போது அவர்களின் காதல் முழு நிலவாக வளர்ந்தது. வி.என்.ஜானகியிடம் தன் இதயத்தைப் பறி கொடுத்ததற்குக் காரணம் என்ன என்பதை, சில கட்டுரைகளில் எம்.ஜி.ஆர். வெளியிட்டிருக்கிறார். "திருமணம் ஆன இரண்டே ஆண்டுகளில் காலமான என் முதல் மனைவி பார்க்கவி என்கிற தங்கமணியின் முகத்தோற்றத்தை ஜானகி அப்படியே பெற்றிருந்தார்.
அவரைப் பார்க்கும்போதெல்லாம், தங்கமணியைப் பார்ப்பது போல உணர்ந்தேன். அதனால்தான் ஜானகி என் வாழ்க்கையில் இடம் பெற்றார்" என்று எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். ஜானகியை மணந்து கொள்ள முடிவு செய்ததும், தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
சதானந்தவதியை "அக்கா" என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிகள் போலவே பழகினார்கள். நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். "வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். உங்களுக்கு என்னால் ஒரு சுகமும் இல்லை.
என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எம்.ஜி.ஆரிடம் சதானந்தவதி ஒருநாள் கூறினார். எம்.ஜி.ஆர். கண் கலங்கினார். "நீ மனப்பூர்வமாகத்தான் சொல்கிறாயா?" என்று கேட்டார். "மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால் நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டாம்.
அவளுக்கு தனி வீடு பார்த்து குடிவையுங்கள்" என்றார், சதானந்தவதி. மனைவியின் பூரண சம்மதத்துடன் வி.என்.ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர். அதன்பின், ஜானகி திரைப்படங்களில் நடிக்கவில்லை. கணவரின் சாதனைகளுக்குத் துணை நின்றார். மருதநாட்டு இளவரசி"யைத் தொடர்ந்து, "மந்திரிகுமாரி"யில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து, "மர்மயோகி", "சர்வாதிகாரி", "என் தங்கை", "பணக்காரி", "ஜெனோவா" முதலிய படங்களில் நடித்தார். கருணாநிதி "மேகலா பிக்சர்ஸ்" நிறுவனத்தைத் தொடங்கியபோது, அதன் பங்குதாரர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "நாம்" படத்தில் நடித்தார். 1954ல் பானுமதியுடன் சேர்ந்து நடித்த "மலைக்கள்ளன்" படம் மகத்தான வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதே ஆண்டில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் வெளிவந்தது. இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் என்ற பெயர் "கூண்டுக்கிளி"க்கு கிடைத்ததே தவிர, படம் வெற்றி பெறவில்லை. 1956ல் லேனா செட்டியார் தயாரித்த "மதுரை வீரன்" படத்தில், லலிதா பத்மினியுடன் எம்.ஜி.ஆர். நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆருக்கு "வசூல் சக்ரவர்த்தி" என்ற பெயரை பெற்றுத் தந்தது.
எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்", தமிழ்நாட்டில் தயாரான முதல் வண்ணப்படம். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாகவும், கடவுள் பக்தராகவும் இருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும், ஜுபிடர் படங்களிலும், எம்.ஜி.ஆரும், மு.கருணாநிதியும் ஒன்றாகப் பணியாற்றியபோது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.
நாட்கள் செல்லச்செல்ல, இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகம் ஆயிற்று. திறமைசாலிகளைக் கண்டால், அவர்களைத் தி.மு.கழகத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு என்றும் உண்டு. எனவே, தி.மு.கழகத்தின் கொள்கைகளை எம்.ஜி.ஆருக்கு எடுத்துக் கூறி, அவரை தி.மு.கழகத்தில் சேரும்படி வற்புறுத்தி வந்தார்.
நடிகர் டி.வி.நாராயணசாமியும் (எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மைத்துனர்) எம்.ஜி.ஆருக்கு நண்பர். அவரும் எம்.ஜி.ஆரை தி.மு.கழகத்திற்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று முயற்சி செய்து வந்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரை பேரறிஞர் அண்ணாவிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார். "வேலைக்காரி" மூலம் திரைப்படத்துறையில் நுழைந்திருந்த அண்ணா, சினிமாத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
நல்ல சினிமா ரசிகர். அவருடைய முக்கியப் பொழுது போக்கு தமிழ்ப்படங்களையும், ஆங்கிலப் படங்களையும் பார்ப்பது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களை அவர் பார்த்திருந்தார். எனவே எம்.ஜி.ஆரை அன்புடன் வரவேற்று, கனிவுடன் பேசினார். அண்ணாவின் அன்பும், பண்பும் எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்தன. "எவ்வளவு பெரிய தலைவர்! எவ்வளவு எளிமையாக இருக்கிறார்! எவ்வளவு அன்புடன் பழகுகிறார்!" என்று வியப்படைந்த எம்.ஜி.ஆர், தி.மு.க.வில் சேர்ந்தார்.
தி.மு.கழகக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். எம்.ஜி.ஆருக்கு முன்பே தி.மு.கழகத்தில் இருந்தவர், சிவாஜி கணேசன். அவர் திருப்பதிக்குப் போய் வந்ததால் சர்ச்சை ஏற்பட்டு, அதன் காரணமாக தி.மு.க.வை விட்டு விலகினார். இதே கால கட்டத்தில் தி.மு.க.வில் சேர்ந்த எம்.ஜி.ஆர்., வெகு விரைவில் அண்ணாவின் இதயத்தில் இடம் பெற்று அவருடைய "இதயக்கனி" ஆனார்.
பல சோதனைகளுக்கு இடையே "நாடோடி மன்னன்" படத்தை சொந்தமாக பிரமாண்டமாகத் தயாரித்ததுடன், டைரக்டராகவும் பணியாற்றி, திரையிட்டார். "படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது. எம்.ஜி.ஆர். திரை உலகின் முடிசூடா மன்னரானார்.
நாடோடி மன்னன் மூலம் சரோஜாதேவி பெரும் புகழ் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்தார். நாடோடி மன்னன் வெற்றி விழா சென்னையில் நடந்தபோது, அதில் பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு பேசினார். "நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர்.
இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்" என்று புகழாரம் சூட்டினார், அண்ணா. "நாடோடி மன்னன்" படத்துக்கு பிறகு, "இன்பக்கனவு" என்ற நாடகத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வந்தார்.
கும்பகோணத்தில் இந்த நாடகம் நடந்தபோது, நடிகர் குண்டுமணியை தூக்கி எறியும் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது. சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்தார். "எம்.ஜி.ஆரின் கால் முறிந்ததால், இனி முன்போல் அவரால் சண்டை போட முடியாது" என்று பலர் நினைத்தார்கள். ஆனால் இந்த கணிப்பை பொய்யாக்கி விட்டு, முன்பை விட விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளில் நடித்தார்.
பி.ஆர்.பந்துலு தயாரித்த "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார். அதன்பின் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். பெரும்பாலும் சரித்திரப் படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், கோட்டு சூட்டு போட்டு நடித்து சமூகப்படங்களில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பினார்கள்.
"திருடாதே" படத்தின் மூலம், சமூகப்படங்களிலும் தன்னால் சாதனை புரிய முடியும் என்று நிரூபித்தார். விஜயாவின் "எங்க வீட்டுப்பிள்ளை" மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சின்னப்பதேவர் தயாரித்த பல சமூகப் படங்களில் நடித்தார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் வீட்டில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.
சுட்டவர் எம்.ஆர்.ராதா. எமனுடன் போராடி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் எம்.ஆர்.ராதா மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் ராதாவுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. (இந்த வழக்கு பற்றிய விவரம், ஏற்கனவே வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் விரிவாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது).
எம்.ஜி.ஆரின் நூறாவது படம் "ஒளி விளக்கு". இது ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமான "சதிலீலாவதி"யின் கதையை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். எம்.ஜி.ஆரின் 100 வது படத்தை தயாரித்தவரும் வாசன். `1967 தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனார்.
ஆனால் 1 ஆண்டு காலத்தில் காலமானார். அண்ணாவை அடுத்து கருணாநிதி முதல்அமைச்சர் ஆனார். அவர் முதல்வராக வேண்டும் என்று பாடுபட்டவர்களில் எம்.ஜி.ஆர். முக்கியமானவர். திரை உலகிலும் சரி, அரசியலிலும் சரி கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். ஆனால் 1971க்குப்பிறகு, யாரும் எதிர்பராத வகையில், கருத்து வேற்றுமை ஏற்பட்டு நண்பர்கள் இருவரும் பிரிந்தனர்.
1972 அக்டோபர் 18ந்தேதி "அண்ணா தி.மு.க" என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். கட்சி ஆரம்பித்து ஏழே மாதங்களில், திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 1977 மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
தனது கடைசிப்படமான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படத்தில் பாக்கியிருந்த ஒரு சில காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு, 1977 ஜுன் 30 ந்தேதி தமது 60 வது வயதில், தமிழக முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்