அலெக்சாண்டர் ஃபிளெமிங்
மருத்துவத் துறையில் மகத்தான புரட்சியை ஏற்படுத்திய பென்சிலின் என்னும் அற்புத மருந்தைக் கண்டறிந்து மனித குலத்துக்கு ஈடிணையற்ற பங்களிப்பை வழங்கிய அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Alexander Fleming) பிறந்த தினம் ஆகஸ்ட் 6. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஸ்காட்லாந்து நாட்டில் லாக்பீல்டுபார்ம் என்ற இடத்தில் பிறந்தவர் (1881). தந்தை ஒரு விவசாயி. எட்டுக் குழந்தைகளில் இவர் கடைக்குட்டி. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அண்ணன்களின் ஆதரவுடன் வளர்ந்துவந்த இவர், பள்ளிப் படிப்புக்குப் பின் லண்டனில் தொழிற்கல்வி பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
l அறிவியலில் ஈடுபாடு கொண்டிருந்ததால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். நாடகம், விளையாட்டு, ஓவியக் கலை ஆகியவற்றில் திறனும் ஆர்வமும் கொண்டிருந்தார். 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
l நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த பேராசிரியர் ஆம்ரைட் டே போலவே தானும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆராய்ச்சியில் ஈடுபட்டால் மருத்துவத் தொழில் செய்து பணம் சம்பாதிக்க முடியாது.
l ஆனால், அலெக்சாண்டரின் மனம் ஆராய்ச்சியையே நாடியது. அண்ணனிடம் தன் விருப்பத்தை வெளியிட்டார். குடும்பத்துக்கு வருமானம் கிடைக்காது என்றாலும் ஆராய்ச்சி வெற்றி பெற்றால் அது மனித குலத்துக்கு பயன்படும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ஆராய்ச்சிக்கு அனுமதி அளித்தார் அண்ணன். மருத்துவப் படிப்பை முடித்தவுடன் ஆம்ரைட்டிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
l ஆம்ரைட்டின் குழு டைபாய்டு தடுப்பூசியைக் கண்டறிந்தது. 1928-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியியல் பேராசியராக நியமிக்கப்பட்டார். கிருமிகள் உடலில் வளர்வதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கினார்.
l ஒருமுறை ஜலதோஷம் பிடித்திருந்த தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரை எடுத்து ஆராய்ந்தபோது, அதில் நோய்க் கிருமிகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை அழிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில், முட்டையின் வெள்ளைத் திரவம், கண்ணீர், உமிழ்நீர் ஆகியவை கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டிருந்ததைக் கண்டறிந்தார்.
l இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைஸோசைம்’ எனப் பெயரிட்டார். முட்டை, விலங்குகள், மலர்கள், தாவரங்கள் அனைத்திலும் நோய்க் கிருமிகளைக் கொல்லும் லைஸோசைம் ஏராளமாக இருப்பதை அறிந்தார். நோயுண்டாக்கும் கிருமிகளை செயற்கை முறையில் ஒரு தட்டில் வளர்த்து வந்தார். அவற்றில் திடீரென்று நீல நிறத்தில் பூஞ்சைத் தொகுதிகள் பூத்திருப்பதையும் அதைச் சுற்றியிருந்த பல கிருமிகள் இறந்திருப்பதையும், பல தூர விலகிக்கொண்டிருப்பதையும் கண்டார்.
l உற்சாகத்துடன் தொடர்ந்து இரவும் பகலும் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவை லைஸோசைம்களை விடப் பன்மடங்கு ஆற்றல் கொண்டிருந்ததை அறிந்தார். அந்தப் பூஞ்சையிலிருந்து பாக்டீரியா தாக்குதலுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக் மருந்தைக் கண்டறிந்தார். அவை பெனிசிலியம் நொடேடம் வகையைச் சேர்ந்தவை என்பதால், அந்த மருந்துக்குப் பென்சிலின் எனப் பெயரிட்டார்.
l இவை நோய்க் கிருமிகளைக் கொன்றதோடு அவற்றின் வளர்ச்சியையும் தடுத்தன. எல்லா விதமான நோய்க்கிருமிகளையும் வெற்றிகொள்ளும் ஆற்றல் பென்சிலினுக்கு இருந்ததால் பல்வேறு வகையான காயங்கள், புண்கள், நோய்கள் குணப்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் இவரது புகழ் பரவியது.
l 1945-ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங், ஹோவர்ட், ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடல் இயங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, 1944-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது, பல கோடி உயிர்களைக் காப் பாற்றிவரும் அருமருந்தைக் கண்டறிந்த இவர் 1955-ம் ஆண்டு 73-ம் வயதில் மறைந்தார்.