நாரண. துரைக்கண்ணன்
தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராகவும் இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண. துரைக்கண்ணன் பிறந்த தினம் ஆகஸ்ட் 24. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சென்னை மயிலாப்பூரில் பிறந்தார் (1906). பெற்றோர் இட்ட பெயர் நடராஜன். ஆனால், வீட்டில் செல்லமாக அழைத்த ‘துரைக்கண்ணு’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. முதலில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், பிறகு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
l குப்புசாமி முதலியாரிடம் பக்தி இலக்கிய மும் கற்றார். நன்னூல் இலக்கணமும் பயின்றார். இவரது ‘சரஸ்வதி பூஜை’ என்ற முதல் கட்டுரை 1924-ல் சுதேசமித்திரன் இதழில் வெளியா னது. ‘லோகோபகாரி’ என்ற வார இதழில் உதவி ஆசிரியரானார்.
l தேச பந்து, திராவிடன், தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். 1932-ல் ‘ஆனந்த போதினி’ இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். அதில்தான் முதன் முதலில் ‘அழகாம்பிக்கை’ என்ற சிறுகதையை எழுதினார். 1934-ல் பிரசண்ட விகடன் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
l இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தனது பத்திரிகையில் தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலேய அரசு அவரைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தாலும், ‘எங்கள் கொள்கையை விடமாட்டோம், இது எங்களது தேசியக் கடமை’ எனத் துணிச்சலுடன் அறிவித்தார்.
l மை வண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, லியோ என வெவ்வேறு புனைப் பெயர்களில், கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்களை எழுதி வந்தார். இவ்வாறு பல்வேறு பெயர்களில் எழுதிவந்தாலும் ‘ஜீவா’ என்ற இவரது புனைப் பெயர்தான் பிரபலமாக அறியப்பட்டது.
l பிரசண்ட விகடனில் ஜீவா என்ற புனைப்பெயரில் பல கதைகளை எழுதினார். காந்தியடிகள் ஹரிஜன இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர், இவர். ‘தீண்டாதார் யார்?’ என்ற சமூகச் சீர்திருத்த நாடகத்தை எழுதினார்.
l ‘கோனாட்சியின் வீழ்ச்சி’, ‘சீமான் சுயநலம்’, தியாகத் தழும்பு’, ‘தரங்கினி’, ‘புதுமைப் பெண்’ ‘உயிரோவியம்’ ‘நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்’, ‘தாசி ரமணி’, ‘காதலனா, காதகனா?’, ‘நடுத்தெரு நாராயணன்’ ஆகியவை இவரது மிகவும் பிரபலமான புதினங்கள். 130க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
l ‘வள்ளலார்’, ‘தந்தை பெரியார்’, ‘சங்கரர்’, ‘சுபாஷ் சந்திர போஸ்’, ‘விவேகானந்தர்’, ‘அரவிந்தர்’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். வல்லிக் கண்ணன், ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், கு. அழகிரிசாமி, அகிலன், தீபம் பார்த்தசாரதி, லட்சுமி ஆகிய படைப்பாளர்களையும், பாரதிதாசன், கம்பதாசன், வாணிதாசன், சுரதா, தமிழொளி, கா.மு. ஷெரீப், கண்ணதாசன் ஆகிய கவிஞர்களையும் தனது இதழ்களில் எழுத வைத்தார்.
l ‘தமிழ்ச் சிறுகதை மன்னன்’ எனப் போற்றப்படும் புதுமைப்பித்தனோடு நட்புறவு கொண்டிருந்தார். அவர் இறந்த பிறகு நண்பர்களின் உதவியோடு நிதி திரட்டி, புதுமைப்பித்தனின் மனைவியிடம் ஒரு பகுதியைப் பணமாகவும் மீதித் தொகையைக் கொண்டு சென்னை அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார்.
l மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். ‘நற்கலை நம்பி’, ‘இலக்கியச் செம்மல்’ என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ‘வாழ்க்கைக் கலைஞர்’ என்று மு.வ.வால் போற்றப்பட்ட நாரண. துரைக்கண்ணன் 1996-ல், 90-வது வயதில் மறைந்தார்.