செம்பை வைத்தியநாத பாகவதர்
கர்னாடக இசை உலகில் 70 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் (Chembai Vaidhyanatha Baghavathar) பிறந்த தினம் செப்டம்பர் 1. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
l கேரள மாநிலம் பாலக்காடு அருகே செம்பை என்ற கிராமத் தில் (1896) பிறந்தார். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் அனைவரும் கர்னாடக இசைக் கலைஞர்கள். இசை இவரது குடும்ப பாரம்பரியமாகவே விளங்கி யது.
l தந்தையிடம் 3 வயதில் இசை கற்கத் தொடங்கினார். சகோதரர் சுப்பிரமணிய பாகவதருடன் ஒட்டப்பாலம் கிருஷ்ணன் கோயிலில் முதல் கச்சேரி 8 வயதில் அரங்கேறியது.
l தன் சகோதரருடன் சேர்ந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். 1914-ல் இருவரும் சேர்ந்து ‘செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம்’ என்ற இசை விழாவைத் தொடங்கினர். ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த விழா இன்றுவரை தொடர்கிறது.
l ஹரிகதையில் புகழ்பெற்று விளங்கிய நடேச சாஸ்திரிகள், செம்பை சகோதரர்கள் பாடுவதைக் கேட்டு வியந்தார். அவர்களை தமிழகத்துக்கு அழைத்துவந்து, தான் ஹரிகதை நிகழ்த்தும் மேடைகளில் கதைச்சூழலுக்கு ஏற்ப அவர்களைப் பாடவைத்தார். இந்நிகழ்ச்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
l தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களிலும் கச்சேரி நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. பல சபாக்கள், இசை விழாக்களில் பாடினார். கிராமஃபோன் இசைத்தட்டுகளிலும் அவரது பாடல்கள் வெளியாயின.
l தனித்துவம் வாய்ந்த குரல் இனிமையால் வைத்தியநாத பாகவதரின் புகழ் மேன்மேலும் பரவியது. அதிக கச்சேரி வாய்ப்புகள் வந்ததால் 1945-ல் சென்னை சாந்தோமில் குடியேறினார். ‘குருவாயூர் ஏகாதசி’ நாளில் சீடர்களுடன் அங்கு கச்சேரி நடத்துவார். கம்பீரமான, கணீரென்ற குரல்வளம் படைத்த அவரது பாடல்கள் கேட்போரை மெய்மறக்க வைக்கும். ஒலிபெருக்கிகள் இல்லாத அக்காலத்தில் அவரது குரல் கடைசி வரிசையில் உள்ளவர்களுக்கும் கேட்கும்.
l வளரும் இளம் கலைஞர்களை உற்சாகப்படுத்துவார். சீடர்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஊக்குவிப்பார். பக்கவாத்தியக்காரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உரிய வாய்ப்பளிப்பார்.
l தொண்டையில் ஒருமுறை பிரச்சினை ஏற்பட்டு அவரால் பாடமுடியாமல் போனது. எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. குருவாயூரப்பன் சன்னதியில் மனமுருக வேண்ட, உடனடியாக பாடத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.
l கேரளாவிலும் தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு. ஜெயன்-விஜயன் இரட்டையர், கே.ஜே.ஜேசுதாஸ், டி.வி.கோபாலகிருஷ்ணன், வி.வி.சுப்பிரமணியம், பி.லீலா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கர்னாடக இசை உலகில் ‘செம்பை’ என்று, தான் பிறந்த கிராமத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறார். ‘காயன காந்தர்வ’, ‘சங்கீத கலாநிதி’, ‘பத்ம பூஷண்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
l சங்கீத உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் 78-வது வயதில் (1974) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் விதமாக 1996-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இசை விழா நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞருக்கு ‘செம்பை விருது’ வழங்கப்படுகிறது.