வில்ஹெம் ஆஸ்வால்டு
நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெடரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு (Friedrich Wilhelm Ostwald) பிறந்த தினம் செப்டம்பர் 2. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
l லத்வியா நாட்டின் ரிகா நகரில் ஜெர்மானியத் தம்பதியின் மகனாக (1853) பிறந்தார். ரியல் ஜிம்னாசியம் என்ற கல்வி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு கற்றார். கூடவே பிரெஞ்ச், ஆங்கிலம், லத்தீன், ரஷ்ய மொழிகளும் கற்றார்.
l தந்தை பீப்பாய் பழுது பார்ப்பவர். பிள்ளை பொறியாளராக வரவேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், ஆஸ்வால்டு சிறு வயதில் இருந்தே வேதியியலில் நாட்டம் கொண்டவர். டார்பட் லான்டஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல் பயின்றார். தன் பேராசிரியரிடம் இயற்பியல் சோதனைக்கூடத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். இயற் வேதியியல் (Physical Chemistry) துறையில் விரிவுரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
l பணியாற்றிக்கொண்டே பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1878-ல் முனைவர் பட்டம் பெற்றார். ரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக 1881-ல் நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்கள் போற்றும் ஆசிரியராக, சிறந்த ஆராய்ச்சியாளராக பிரபலம் அடைந்தார்.
l அங்கு 6 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1887-ல் லெய்ப்ஸிக் நகருக்கு சென்றார். லெய்ப்ஸிக் பல்கலைக்கழகத்தில் இயற் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மின் வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இத்துறையில் நீர்த்தல் விதியைக் கண்டறிய இவரது ஆராய்ச்சிகள் உதவின. இது ‘ஆஸ்வால்டு நீர்த்தல் விதி’ எனப்படுகிறது.
l வினைவேக மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்தார். தொழில்துறை சார்ந்த வேதிப் பொருள் உற்பத்தி, உயிர்வேதி முக்கியத்துவம் வாய்ந்த வினைகள் போன்றவற்றில் வினைவேக மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.
l வினைவேக மாற்றம், ரசாயன சமநிலை மற்றும் எதிர்வினை இயக்க வேகம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1909-ல் நோபல் பரிசு பெற்றார். ஆற்றலியல் குறித்தும் முக்கியத்துவம் வாய்ந்த பல அம்சங்களைக் கண்டறிந்தார்.
l லெய்ப்ஸிக் பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர், அதை இயற்பியல் சார்ந்த வேதியியல் கல்விக்கான உலகின் மிகச் சிறந்த கல்வி நிறுவனமாக மாற்றினார்.
l ‘டெக்ஸ்ட் புக் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி’, ‘அவுட்லைன் ஆஃப் ஜெனரல் கெமிஸ்ட்ரி’ என்பது உட்பட பல பாடப் புத்தகங்களையும், பகுப்பாய்வு வேதியியல், மின் ரசாயனவியல், கனிம வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
l 1894 முதல் ஆராய்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். ‘இயற்கைத் தத்துவம்’ குறித்து அதிக கவனம் செலுத்தினார். 1906-ல் ஓய்வு பெற்ற பிறகும், கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். ஆற்றலியல், பொருண்மைவாதம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தினார். நிறங்கள் குறித்த புதிய கோட்பாட்டை நிறுவினார்.
l இயற்பியல் வேதியியல் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் வில்ஹெம் ஆஸ்வால்டு 79-வது வயதில் (1932) மறைந்தார்.