தாதாபாய் நௌரோஜி
சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி (Dadabhai Naoroji) பிறந்த தினம் செப்டம்பர் 4. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
l பம்பாயில் (1825) பார்சி குடும்பத் தில் பிறந்தவர். 4 வயதில் தந்தை இறந்தார். தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், மகனை நன்கு படிக்கவைத்தார். பம்பாய் எல்பின்ஸ்டன் கல்வி நிலையத்தில் பயின்றார்.
l எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணி தம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான். 1852-ல் அரசியல் பயணத் தைத் தொடங்கியவர், ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்.
l மக்களுக்கு கல்வியறிவு வழங்கவும் விடுதலை வேட்கையை எழுப்பவும் ஞான் பிரச்சார் மண்டல், அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், உடற்பயிற்சிப் பள்ளி, விதவையர் சங்கம் ஆகியவற்றை தொடங்கினார்.
l லண்டனுக்கு 1855-ல் சென்றார். முதல் இந்திய வர்த்தக அமைப்பை 1859-ல் தொடங்கினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி மொழிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1866-ல் கிழக்கிந்திய சங்கத்தை தோற்றுவித்தார். ஆங்கில ஆட்சியில் இந்தியர்கள் படும் துன்பம் குறித்து தன் பேச்சுகள், கட்டுரைகள் மூலமாக இங்கிலாந்து மக்களுக்கு விளக்கினார்.
l இந்திய தேசிய சங்கத்தை சுரேந்திரநாத் பானர்ஜியுடன் சேர்ந்து கல்கத்தாவில் ஆரம்பித்தார். ஆலன் ஆக்டேவியன் ஹியூம், உமேஷ்சந்திர பானர்ஜியுடன் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸை 1885-ல் உருவாக்கினார்.
l ஒரே குறிக்கோளைக் கொண்டிருந்த இந்திய தேசிய சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பம்பாய் சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.
l பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக 1892 முதல் 1895 வரை இருந்தார். இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் தலைவர்கள் 1907-ல் இரண்டாகப் பிரிந்தபோது மிதவாதிகளின் பக்கம் இருந்தார்.
l காந்தியடிகள், திலகர் போன்ற பெருந் தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இவரது பொருளாதாரக் கருத்துகள் ஆழமானவை, செறிவு நிறைந்தவை. இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20தான் என்று 1870-ல் சுட்டிக்காட்டினார்.
l ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், ராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் அடங்கிய முதல் பிரிவினர் தங்கள் வருமானம் முழுவதையும் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று அங்கு செல்வத்தைக் குவிக்கின்றனர். மற்றொரு பிரிவான ஏழைகள், விவசாயிகள், சுரண்டப்படும் பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கின்றனர்’ என்றார்.
l ‘பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா’ என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தினார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது. சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி 92-வது வயதில் (1917) மறைந்தார்.