வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற தாரக மந்திரத்துடன், எளிமையான உடற்பயிற்சிகள், மனப்பயிற்சிகளை வகுத்தளித்த மகான் வேதாத்ரி மகரிஷி (Vethathiri Maharishi) பிறந்த தினம் ஆகஸ்ட் 14. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் (1911) நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். தாயிடம் பக்திக் கதைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். வறுமையால் 3-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தறி நெய்யத் தொடங்கினார்.
l 18 வயதில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அப்போது அறிமுகமான ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணா ராவிடம் தியானம், யோகா கற்றார். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.
l சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறினார். இந்தக் கட்டத்தில் அவருக்குள் பல ஆன்மிகச் சிந்தனைகள் உருவாயின. கடவுள், மனிதப் பிறவியின் நோக்கம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு விடை காணும் உந்துதலும், ஆன்மிகத் தேடல்களும் எழுந்தன. சித்தர்களின் நூல்களைக் கற்றார்.
l ஆழ்ந்த ஆன்மிகத் தேடலின் பலனாக 35 வயதில் ஞானம் அடைந்தார். பிரபஞ்சம், மனித வாழ்க்கை பற்றி கவிதைகள், கட்டுரைகளாக இவர் எழுதியவை நூல்களாக வெளிவந்தன. விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.
l பாரம்பரிய தியான, யோக முறைகளை பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைவருக்கும் ஏற்ற பயிற்சி முறைகளை வகுத்தார். குண்டலினி யோகம், எளிய உடற்பயிற்சிகள், மனத்தூய்மை அளிக்கும் சுய பரிசோதனை, முதுமையை தள்ளிப்போடும் காயகல்ப பயிற்சி இவை நான்கும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையை வகுத்தார்.
l இவற்றை மக்களுக்கு கற்றுத்தர பல இடங்களிலும் மனவளக் கலை மன்றங்கள், அறிவுத் திருக்கோயில்களை ஏற்படுத்தினார். எல்லா மதங்களின் சாரமும் ஒன்றே என்று வலியுறுத்தினார். ‘உலக சமாதானம்’ என்ற நூலை 1957-ல் வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
l மனிதகுலம் அமைதியுடன் வாழும் முறைகளை எடுத்துரைக்க 1958-ல் உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கினார். இது இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இயங்கிவருகிறது. இவர் வகுத்த தியான முறைகள், கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன.
l பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தில் இவரது நூல்கள் இடம்பெற்றுள்ளன. ‘வேதாத்ரியத்தின் இறைநிலை விளக்கம்’, ‘பிரம்மஞான சாரம்’, ‘நான் யார்?’ என்பது உட்பட தமிழிலும் ஆங்கிலத்திலும் 80 நூல்களை எழுதியுள்ளார்.
l பொள்ளாச்சி அருகே ஆழியாறில் அருட்பெருஞ்ஜோதி நகரை 1984-ல் நிர்மாணித்தார். ‘அன்பொளி’ என்ற ஆன்மிக இதழை வெளியிட்டார். ஆன்மிக நெறிகளோடு, இல்லற வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களையும் உபதேசித்தார்.
l ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற போதனையுடன் பல லட்சம் மக்களுக்கு அருளுரைகளை வழங்கிய மகான் வேதாத்ரி மகரிஷி 95 வயதில் (2006) மறைந்தார்.