பண்டிட் விஷ்ணு நாராயண் பாத்கண்டே
இந்துஸ்தானி இசை இலக்கணத்தை எளிமைப்படுத்திய இசை மேதை பண்டிட் விஷ்ணு நாராயண் பாத்கண்டே (Pandit Vishnu Narayan Bhatkande) பிறந்த தினம் ஆகஸ்ட் 10. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மும்பை அருகே பாலகேஷ்வர் கிராமத்தில் (1860) பிறந்தார். இசை ஆர்வம் மிக்க தந்தை, இவரையும் இசை கற்க ஊக்கப்படுத்தினார். அதனால் சிறு வயதிலேயே வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார்.
l வல்லப்தாஸிடம் சிதாரும், ராவ்ஜிபாவிடம் வாய்ப்பாட்டும் கற்றார். பட்டப் படிப்புடன் சட்டமும் பயின்றார். பின்னர், வழக்கறிஞர் பணி மேற்கொண்டார். கராச்சி உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
l பெல்பக்கர், அலி உசேன்கான், விலாயத் உசேன்கானிடமும் இசை பயின்றார். மும்பையில் ‘காயக் உத்தேஜன் மண்டல்’ என்ற சங்கீத அமைப்பின் உறுப்பினரானார். இசையை ஆழமாக அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.
l இவரது சங்கீத தேடல் பயணம் 1907-ல் தொடங்கியது. தென்னிந்திய நூலகங்களுக்கு சென்று இசை பற்றிய பழமையான நூல்களைப் படித்தார். வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு யாத்திரை சென்று பல இசை நிபுணர்களை சந்தித்தார்.
l மனைவியும் மகளும் நோய்வாய்ப்பட்டு அடுத்தடுத்து இறந்த பிறகு வக்கீல் தொழிலை விட்டுவிட்டு, முழுமூச்சாக இசைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ராகங்கள் பற்றிய விளக்கங்கள் அடங்கிய ‘ஸ்வர் மாலிகா’ இவரது முதல் நூல். ‘மல்லாட்சய சங்கீதம்’ என்ற சமஸ்கிருத நூலை 1909-ல் வெளியிட்டார். அதன் விளக்க உரையை மராத்தியில் எழுதினார். இந்துஸ்தானி இசை கற்பவர்களுக்கு இன்றளவும் இந்நூல் முக்கியமானதாக விளங்குகிறது.
l இந்துஸ்தானி இசை குறித்து ஆராய்ச்சி செய்து, நவீன ஆய்வுக் கட்டுரையை எழுதினார். ராகா (ஆண்), ராகினி (பெண்), புத்ரா (குழந்தை) என்ற அடிப்படையில் ராகங்கள் வகைப்படுத்தப்பட்டதை மாற்றி, ஸ்வரங்கள் அடிப்படையிலான ‘தாட்’ முறையை அறிமுகம் செய்தார்.
l ராகங்களை எளிதில் புரியவைக்க ‘பந்திஷ்’ எனப்படும் இசைக் கோர்வைகளை உருவாக்கினார். இவை ராகங்களின் இலக்கணத்தை விளக்கின.
l பல இசைப் பள்ளிகள், இசைக் கல்லூரிகளைத் தொடங்கினார். பரோடா ஸ்டேட் இசைப் பள்ளியை 1916-ல் மறுசீரமைத்தார். குவாலியர் மஹாராஜாவின் உதவியுடன் குவாலியரில் மாதவ் இசைக் கல்லூரியைத் தொடங்கினார். லக்னோவில் தொடங்கப்பட்ட மேரீஸ் இசைக் கல்லூரிக்காக பிரத்யேக பாடத் திட்டம் தயாரித்தார். இக்கல்லூரி ‘பாத்கண்டே மியூசிக் இன்ஸ்டிடியூட்’ என்ற பெயரில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக விளங்குகிறது
l வாய்மொழியாக இருந்த இசைக்கு நூல் வடிவம் தந்தார். ‘சங்கீத் க்ராமிக் புஸ்தக் மாலிகா’ என்ற பாட நூலை 6 தொகுதிகளாகத் தயாரித்தார். சமஸ்கிருதம், மராத்தி, இந்தி, ஆங்கிலத்தில் ஏராளமான இசை நூல்களைப் படைத்துள்ளார்.
l இந்திய சாஸ்திரிய இசை குறித்து இந்துஸ்தானி, கர்னாடக இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி விவாதிக்கும் வகையில் தேசிய இசை மாநாடுகள் நடத்தும் முறையை தொடங்கிவைத்தார். ‘இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை’ என்று போற்றப்படும் பாத்கண்டே 76 வயதில் (1936) மறைந்தார்.