விநாயக கிருஷ்ண கோகாக்
கன்னட இலக்கியப் படைப்பாளியும், ஞானபீட விருது பெற்றவருமான விநாயக கிருஷ்ண கோகாக் (Vinayaka Krishna Gokak) பிறந்த தினம் ஆகஸ்ட் 9. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடக மாநிலம் சாவனூரில் (1909) பிறந்தார். தார்வார் கர்நாடக கல்லூரியில் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். புனே ஃபெர்குசன் கல்லூரி யில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
* இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று முதல் வகுப்பில் தேறினார். நாடு திரும்பியதும், சாங்லி விலிங்டன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
* கன்னடக் கவிஞர் டி.ஆர்.பந்த்ரே இவரது இலக்கிய ஆர்வத்துக்கு வித்திட்டவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'கலோபாஸக்' 1934-ல் வந்தது. 'சமுத்ர கீதேகள்ளு', 'அப்யுதயா', 'பாலதெகிலதல்லி' உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன.
* 'கவி காவ்ய மஹோன்னதி', 'நவ்யதே' ஆகிய விமர்சன நூல்களையும் எழுதியுள்ளார். 'ஜனநாயக்', 'யுகாந்தர்' ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. 'சமரசவே ஜீவனா' என்ற நாவல் மிகவும் பிரசித்தி பெற்றது.
* வெளிநாட்டில் கல்வி பயின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையில் இவர் எழுதிய பயணக் கட்டுரைகள் 2 தொகுதிகளாக வந்தன. இந்தி இலக்கியப் படைப்பாளி ராமதாரி சின்ஹ தினகரின் கவிதைகளை 'வாய்சஸ் ஆஃப் ஹிமாலயா' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.
* 1982-ல் வெளிவந்த 'பாரத சிந்து ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990-ல் ஞானபீட விருது வழங்கப்பட்டது. வேத காலத்தைப் பற்றிய இக்காவியம் 35,000 வரிகள் கொண்டது. 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய காவியமாகக் கருதப்படுகிறது.
* கர்நாடக பல்கலைக்கழகம், அமெரிக்க பசிபிக் பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. பத்ம உட்பட பல விருதுகளைப் பெற்றவர். மதம், தத்துவம், கல்வி, கலாச்சாரங்களில் இவர் கொண்ட ஆர்வமும், ஈடுபாடும் இவரது படைப்புகளில் பிரதிபலித்தன.
* புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் தீவிர பக்தர். சாய்பாபாவின் அருள் உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'அட்வென்ட் ஆஃப் சத்யசாய்' என்ற புத்தகத்தில் சாய்பாபாவின் அற்புதங்கள், அறப்பணிகள் குறித்து விளக்கியுள்ளார். புட்டபர்த்தி சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் முதல் துணைவேந்தராக (1981-1985) பணிபுரிந்தார்.
* ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். கன்னடத்தில் 50, ஆங்கிலத்தில் 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1934-ல் தொடங்கிய இவரது இலக்கியப் பணி அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ந்தது. கர்நாடக மாநிலப் பள்ளிகளில் கன்னட மொழியை முதன்மை மொழியாக கற்றுக்கொடுக்க வேண்டும் என இவரது தலைமையிலான கல்விக் குழு பரிந்துரை செய்தது.
* கவிஞர், நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், விமர்சகர், கட்டுரையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவரும், கன்னட இலக்கியத்தின் முக்கியத் தூணாக விளங்கியவருமான விநாயக கிருஷ்ண கோகாக் 83 வயதில் (1992) மறைந்தார். ஆண்டுதோறும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை கர்நாடக அரசு நடத்திவருகிறது.