மாவீரன் நெப்போலியன்
மாவீரன் என போற்றப்பட்ட பிரெஞ்சு பேரரசர்
பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் (Nepoleon Bonaparte) பிறந்த தினம் ஆகஸ்ட் 15. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பிரான்ஸின் கார்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் (1769) பிறந்தார். மன்னர் 16-ம் லூயியின் அந்த தீவுக்கான பிரதிநிதியாகப் பணியாற்றியவர் இவரது தந்தை. சிறு வயதிலேயே துணிச்சல் மிக்கவனாகத் திகழ்ந்தான்.
# தந்தை சொற்ப வருமானம் ஈட்டினாலும், கஷ்டப்பட்டு மகனை பிரான்ஸுக்கு அனுப்பி ராணுவப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கு செலவுக்குப் பணமின்றி, கேலி, கிண்டலுக்கு ஆளானாலும் பொறுப்போடு படித்தார்.
# பல வீர வரலாறுகளை படித்தார். கணிதம், புவியியல், வரலாற்றுப் பாடங்களில் சிறந்து விளங்கினார். போர் வீரனுக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக 1785-ல் பதவி ஏற்றார். 1796-ல் படைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார்.
# பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804-ல் 35-வது வயதில் பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். போர்களில் வெற்றியைக் குவித்தார். இங்கிலாந்து நீங்கலாக ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அதுவரை கலகமும், வறுமையுமாக இருந்த பிரான்ஸில் அமைதியும் வளமும் நிலவியது.
# அரசியல், பொருளாதார, சட்டத் துறைகளில் பல சீர்திருத்தங்கள் செய்தார். பாலங்கள் கட்டினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரிவசூலில் மாற்றம் கொண்டுவந்தார். அரசு வங்கியை உருவாக்கினார்.
# தேச நிர்வாகத்துக்கான புதிய சட்டங்களை உருவாக்கினார். இவை ‘கோட் ஆஃப் நெப்போலியன்’ எனப்படுகின்றன. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது இதன் சாராம்சம். நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்தார். அரசியலில் இருந்து மதத்தை ஒதுக்கிவைத்தார். இவை இன்றும் பிரெஞ்ச் சட்டங்களாக நீடிக்கின்றன.
# புத்தகம் வாசிப்பில் அதீத ஆர்வம் கொண்டவர். தினமும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் செல்லும் இடமெல்லாம், ஒரு வண்டி நிறைய புத்தகங்களும் கூடவே செல்லுமாம். அவரது ஆட்சியில் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
# ரஷ்யா மீது 1812-ல் படையெடுத்தார். அதில் பல வீரர்களை இழந்ததோடு தோல்வியையும் தழுவினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள் பிரான்ஸை தாக்கின. நெப்போலியன் கைது செய்யப்பட்டு எல்பா தீவில் சிறைவைக்கப்பட்டார்.
# ‘முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது’ என்பது இவரது தாரக மந்திரம். ஓராண்டுக்குள் அங்கிருந்து தப்பி பிரான்ஸ் வந்து மீண்டும் சக்ரவர்த்தியானார். மீண்டும் புதிய படையை உருவாக்கி போருக்குப் புறப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக 2-வது முறையும் தோல்வியைத் தழுவினார். வாட்டர்லூ (பெல்ஜியம்) என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்ட நெப்போலியனை இங்கிலாந்து ராணுவம் சிறைபிடித்து, ஆப்பிரிக்கா அருகே உள்ள செயின்ட் ஹெலனா தீவில் அடைத்தது.
# அங்கு 6 ஆண்டுகள் இருந்தார். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் 52 வயதில் (1821) மறைந்தார்.