பிரடெரிக் ரஸல்
அமெரிக்க ராணுவ மருத்துவரும், ராணுவத்தில் டைபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்தவருமான பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் (Frederick Fuller Russell) பிறந்த தினம் ஆகஸ்ட் 17. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் அபர்ன் நகரில் (1870) பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1893-ல் மருத்துவத்தில் டாக்டர் பட்டமும், 1917-ல் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
l ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்த இவர், வீரர்களுக்கு டைபாய்டு வராமல் தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். இதையடுத்து, ராயல் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், டைபாய்டு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருமான சர் அம்ரோத் ரைட்டின் ஆய்வுக்கூடப் பார்வையாளராக இவரை இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார் ராணுவ மருத்துவப் பிரிவு தலைவர்.
l அங்கு பணி முடித்து திரும்பியவர், ரைட்டின் ஆராய்ச்சி குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். இதை முன்மாதிரியாகக் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். அதன்படி தடுப்பூசி ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது. வாய்வழி மருந்து மற்றும் தடுப்பூசி மருந்தின் திறனை ஒப்பிட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். டைபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை மேம்படுத்தினார்.
l ராணுவ வீரர்களுக்கு 1910 முதல் சிறிது சிறிதாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. இது நல்ல பலனைத் தந்ததால், 1911-ல் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதனால் உயிரிழப்புகள், நோய் பாதிப்புகள் கணிசமாக குறைந்தன. இதற்கிடையில், ராணுவ மருத்துவக் கல்லூரி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகம் ஆகியவற்றில் காப்பாளராக, பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார்.
l தடுப்பூசியின் வெற்றியால் ராக்பெல்லர் சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் விக்லிஃப் ரோஸ் ஈர்க்கப்பட்டார். அந்த அமைப்பின் பொது சுகாதார ஆய்வுக்கூடப் பிரிவை மேம்படுத்துவதற்காக 1919-ல் ரஸலை அழைத்தார்.
l பல மருத்துவத் திட்டங்களை இவரது பங்களிப்புடன் ராக்பெல்லர் அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தியது. நோய் கண்டறியும் பணிக்காக பல ஆய்வுக்கூடங்களை உருவாக்கினார் ரஸல்.
l ராக்பெல்லர் அறக்கட்டளையில் இருந்து 1935-ல் ஓய்வு பெற்ற பிறகு, மக்களுக்கு பயன்படும் மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டார். விவசாயப் பயன்பாட்டுக்கான நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகளுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினார்.
l பொதுநலத் திட்டங்களில் அவரது பங்களிப்பை பாராட்டி அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி ‘பப்ளிக் வெல்ஃபேர்’ பதக்கம் வழங்கியது. அடுத்த 4 ஆண்டுகள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நோய்த்தொற்று மற்றும் தடுப்பு மருந்து துறை பேராசிரியராக பணியாற்றினார்.
l தடுப்பூசி மருந்தை ஏராளமானோரிடம் சென்றடைய வைத்ததில் மகத்தான பங்களிப்பை வழங்கியவர். அமெரிக்க தேசிய மருந்தி யல் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவரது கட்டுரைகள் ஆராய்ச் சியாளர்களுக்கான வழிகாட்டியாக இன்றும் பயன்படுகின்றன.
l டைபாய்டு தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, இறுதிவரை நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 90 வயதில் (1960) மறைந்தார்.