தீரர் சத்தியமூர்த்தி
விடுதலைப் போராட்ட வீரரும், ‘தீரர்’ என்று போற்றப்பட்டவருமான சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று ஆகஸ்ட் 19. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் (1887) பிறந்தார். தந்தை சமஸ்கிருத அறிஞர், வழக்கறிஞர். இவரும் சமஸ்கிருதத்தில் வல்லுநராகத் திகழ்ந்தார். நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். சமூக சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர்.
l இளமையிலேயே தந்தையை இழந்தவர், கஷ்டப்பட்டு படித்து முன்னேறினார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சட்டப் படிப்பும் பயின்றார். கல்லூரித் தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார். இது மக்களாட்சி முறையில் இவருக்கு ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தியது.
l தமிழ், ஆங்கிலத்தில் சிறந்த சொல்லாற்றல் கொண்டவர். சிறந்த வழக்கறிஞராகவும் விளங்கினார். காங்கிரஸில் உறுப்பினராக சேர்ந்தார். மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரவுலட் சட்டத்துக்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
l திலகர், சீனிவாச சாஸ்திரி அடங்கிய தூதுக்குழுவுடன் இருமுறை இங்கிலாந்து சென்றார். பின்னர், 1920-ல் ஊர் ஊராகச் சென்று தன் பேச்சாற்றலால் மக்களிடம் சுதந்தர வேட்கையைப் பரப்பினார். 1923-ல் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார்.
l சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் 1926-ல் இங்கிலாந்துக்கு சென்றபோது, பல சொற்பொழிவுகள் ஆற்றினார். பாரதியின் கவிதைகளை அரசு 1928-ல் தடை செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் இவர் ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. காந்தி, படேலுக்கு நெருக்கமானவர்.
l சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-ல் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள். சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன.
l சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.
l காமராஜரின் அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 1936-ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ல் சென்னை மேயராகப் பணியாற்றினார். தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடியவர். பல மேடைகளில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்களிடம் சுதந்தர எழுச்சியை ஊட்டினார்.
l சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார். 1942-ல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
l இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ‘சத்தியமூர்த்தி பவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 56 வயதில் (1943) மறைந்தார்.