தமிழ்த்தென்றல் திரு.வி.க.
கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், ‘தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் (Thiru V.Kalyanasundaram) பிறந்த தினம் ஆகஸ்ட் 26.
l காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் என்ற சிற்றூரில் (1883) பிறந்தவர். தந்தை ஆசிரியர், வணிகர். இசை, இலக்கியப் பயிற்சி பெற்றவர். அவரிடமே கல்வியைத் தொடங்கிய திரு.வி.க., பின்னர் சென்னை ராயப்பேட்டையில் தங்கி ஆரம்பக்கல்வி பயின்றார்.
l தமிழ் அறிஞர் யாழ்ப்பாணம் நா.கதிரவேற் பிள்ளையிடம் புராணங்கள், யாப்பிலக்கண மும், மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் வடமொழி, சைவ சமய நூல்களையும், பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களையும், அப்துல் கரீமிடம் திருக்குர்ஆனும் கற்றார். ஜஸ்டிஸ் சதாசிவராவ் தொடர்பால் ஆங்கில அறிவு பெற்றார்.
l அன்னிபெசன்ட் அம்மையார், மறைமலை அடிகளாரின் தொடர்பு இவரை உயர்த்தியது. 1906-ல் ஸ்பென்சர் நிறுவனத்தில் கணக்கராக சேர்ந்தார். விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டதால், அந்த வேலையைத் துறந்தார். வெஸ்லி கலாசாலையிலும், பள்ளியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
l ‘தேச பக்தன்’ பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார். தனது எழுச்சிமிக்க எழுத்துகளால், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களை பொங்கி எழச்செய்தார். அந்நிய அடக்குமுறையை எதிர்த்து மேடைகளில் ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.
l சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். திலகர்தான் இவரது அரசியல் குரு.
l சென்னையில் 1918-ல் முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. போலீஸார், அச்சகத் தொழிலாளர்களுக்கான சங்கங்கள் உருவாகவும் காரணமாக இருந்தார். 1920-ல் நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்திக் கனலை மூட்டினார்.
l 1926-ல் அரசியலைத் துறந்தார். பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை, மாதர் சங்கம், கைம்மைப் பெண்கள் கழகம் ஆகிய அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தார்.
l முருகன் அருள் வேட்டல், கிறிஸ்துவின் அருள் வேட்டல் ஆகிய செய்யுள்கள், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் வரலாறு, தேசபக்தாமிர்தம், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவசமய சாரம், நாயன்மார் திறம், சைவத் திறவு, முருகன் அல்லது அழகு என பல்வேறு துறைகளில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளார்.
l புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார். ‘தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’ என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.
l எளிமையின் உருவமாகத் திகழ்ந்தவர். சொந்தவீடு கிடையாது. செருப்புகூட அணியமாட்டார். எளிய, தூய கதராடையே உடுத்துவார். ‘திரு.வி.க. தமிழ்’ என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தவர். தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 70-வது வயதில் (1953) மறைந்தார்.