பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸன்
இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜோசஃப் ஜாக்ஸன் (Michael Joseph Jacksan) பிறந்த தினம் ஆகஸ்ட் 29.
l அமெரிக்காவின் இன்டியானா மாகாணம் கேரி (Gary) என்ற இடத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் (1958). தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தார். ஒரு இசைக் கலைஞரும்கூட. தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்தியக் குழுவில் இசைத்து வந்தார்.
l 6 வயதில் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற பாடல் போட்டியில் சிறுவன் முதல் பரிசு பெற்றான். இந்த வெற்றி, இசை ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. அண்ணன்மார்கள் இணைந்து ஆரம்பித்த ஜாக்ஸன்-5 இசைக் குழுவில் அங்கம் வகித்தான். உலகளவில் பிரபலமான அப்பல்லோ தியேட்டரில் ஜாக்ஸன்-5 குழுவின் முதல் ஆல்பத்தை 1982-ல், பிரபல பாடகி டயானா ராஸ் வெளியிட்டார்.
l இந்தச் சிறுவனுடன் இணைந்து தொடர்ந்து பாடி வந்தார். இதனால், உலகம் முழுவதும் இவனது புகழ் பரவியது. 9 வயதிலேயே நட்சத்திர அந்தஸ்து வசப்பட்டது. 24-ம் வயதில் இவர் வெளியிட்ட ‘த்ரில்லர்’ இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது.
l பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். இவரது ‘பிளாக் அன்ட் ஒயிட்’ என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர்.
l இன்றுவரை இவ்வளவு அதிகமான ரசிகர்கள் பார்த்த ஒரே நிகழ்ச்சி இதுதான். இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன.
l இவரைப் போன்ற இன்னொரு கலைஞன் இனி வரப்போவதில்லை என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார். மைக்கேல் ஜாக்ஸன் இல்லாமல் நாங்கள் இல்லை என்கிறார்கள், பிரபுதேவாவும், பிரபல இந்தி நடனக் கலைஞர் ஃபராகானும்.
l ராணுவத்தினர் அணியும் சீருடைகளில் மாற்றம் செய்து அணிவது, கைகளில் கிளவுஸ், உடைகளில் வைரம் பதிப்பது, ஷார்ட் பேன்ட் இப்படி இவர் அணிந்த உடைகள் அனைத்தும் நாகரிக மாற்றத்தின் ஆரம்பமாக, ஃபேஷன் அடையாளமாக உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டது.
l த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் ஆகிய ஆல்பங்கள் இன்றும் இளைஞர்களை மெய்மறக்க வைக்கும் இசைப் பொக்கிஷங்கள். நெற்றியின் முன் சரிந்து விழும் முடிக்கற்றையோடு மைக்கேல் ஜாக்ஸன் மேடையில் தோன்றிய உடனேயே ரசிகர்கள் எழுப்பும் ஆரவார முழக்கம், விண்ணைப் பிளக்கும்.
l பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை, இவர். அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக் கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம்.
l இவர் குறித்த பல சர்ச்சைகள் வலம் வந்தாலும், எதுவுமே இவரது புகழை மங்கச் செய்ததில்லை. இன்றளவும் பாப் இசையுலகின் ஈடுஇணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு 2009-ம் ஆண்டில் 50-வது வயதில் மறைந்தார்.