அய்யன்காளி
தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத் தந்த கேரளப் போராளி அய்யன்காளி (Ayyankali) பிறந்த தினம் ஆகஸ்ட் 28.
# கேரளத்தின் திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் (1863) பிறந்தவர். தந்தை விவசாயக் கூலித் தொழிலாளி. தன் குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதைப் பார்த்து சிறு வயதிலேயே வேதனை அடைந்தார்.
# பள்ளிக்கு சென்று படிக்க முடியாவிட்டாலும், கட்டுடலும் நல்ல உயரமும் கொண்டு மிகுந்த வலிமையுடன் திகழ்ந்தார். கல்வி அறிவு, பொருளாதாரப் பின்புலம் இல்லாவிட்டாலும்கூட யாருக்கும் எதற்காகவும் அஞ்சாத வீரனாக இருந்தார். தவறுகளை துணிச்சலுடன் தட்டிக்கேட்டார்.
# புராணங்களில் இருந்து சமுதாய விடுதலைக்கான பல நல்ல விஷயங்களை எடுத்து நாடகங்கள் நடத்தி, தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தூய்மையான ஆடை, தலைப்பாகை அணிந்து கம்பீரமாக வலம் வந்தார். ஒரு வில் வண்டி வாங்கி காளைகளைப் பூட்டி, அனுமதி மறுக்கப்பட்ட தெருக்களில் சென்றார். எதிர்த்தவர்களை தன் வலிமையால் அடக்கினார்.
# மக்களை ஒன்று திரட்டி, சாதிக் கொடுமைகளை எதிர்த்து இவர் நடத்திய போராட்டங்கள் கேரளம் முழுவதும் எதிரொலித்தன. அடிமைப்பட்டு கிடந்த மக்கள் தங்களை மீட்டெடுக்க வந்த தலைவராக இவரைப் போற்றினர்.
# ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை1904-ல் தொடங்கினார். கேரளத்தில் முதன்முதலாக நடந்த இந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, ‘ஞாயிற்றுக்கிழமை ஓய்வு’ உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தது.
# ஜாதிபேதமற்று எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. தன் சமூக மக்களை ஒன்றுபடுத்தி ‘சாதுஜன பரிபாலன சங்கம்’ என்ற அமைப்பை 1905-ல் தொடங்கினார். ‘சாதுஜன பரிபாலன்’ என்ற மாத இதழையும் தொடங்கினார்.
# தன் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மற்ற சமூகத்தினரும் உணரவைத்தார். 1912-ல் மூலம் பிரஜாசபை என்ற அன்றைய சட்டமன்றத்தின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அப்பதவியில் 20 ஆண்டுகள் இருந்து தொண்டாற்றினார்.
# தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையைத் தகர்க்கும் போராட்டத்தை தொடங்கினார். 1915-16ல் இப்போராட்டம் வெகுவாகப் பரவியது. ‘கல்மாலை அறுப்புப் போர்’ என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் இப்போராட்டம் வெற்றி பெற்றது. பெண்கள் தங்கள் கல்மாலைகளை அறுத்தெறிந்துவிட்டு மேலாடை அணியத் தொடங்கினர்.
# கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோயில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றுக்காகவும் ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார்.
# காந்தியடிகள் 1937-ல் வெங்கனூர் சென்று இவரை சந்தித்தார். இவரது தொண்டுகளைப் பாராட்டி ஆசி வழங்கினார். தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளியான அய்யன்காளி 78-வது வயதில் (1941) மறைந்தார்.