ரூதர்ஃபோர்டு
நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) பிறந்த தினம் ஆகஸ்ட் 30.
* நியூசிலாந்தின் பிரைட்வாட்டர் பகுதியில் (1871) பிறந்தார். தந்தையின் பணி காரணமாக குடும்பம் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்தது. அறிவுதான் ஆற்றல் என்பதை சொல்லிச் சொல்லி பிள்ளைகளை வளர்த் தார் ஆசிரியையான அம்மா.
* ஓய்வு நேரத்தில் சகோதரர்களுடன் சேர்ந்து பால் கறப்பது, சுள்ளி பொறுக்குவது என சுற்றுவார். வறுமையிலேயே வளர்ந்ததால், ‘நன்றாகப் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும்’ என்பது சிறு வயதிலேயே உள்ளத்தில் நன்கு பதிந்தது.
* தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் பயின்றார். படிப்பில் சூரன். 10 வயதில் கிடைத்த ஒரு அறிவியல் புத்தகம் ஆராய்ச்சி மனோபாவத்தை அவரிடம் அரும்பவைத்தது. அதில் உள்ள ஆய்வுகளை உடனுக்குடன் செய்துகாட்டி குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.
* நெல்சன் கல்லூரி, நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கேன்டர்பரி கல்லூரியில் பயின்றார். 23 வயதுக்குள் பிஏ, எம்ஏ, பிஎஸ்சி என 3 பட்டங்களைப் பெற்றார். உதவித்தொகை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு பிரபல விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சனின் மாணவரானார். ட்ரினிட்டி கல்லூரியில் ஆய்வு மாணவராக சேர்ந்து 1897-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
* கனடாவின் மான்ட்ரீல் நகரில் உள்ள மெக். கில் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைப் பேராசிரியராக 27 வயதில் நியமிக்கப்பட்டார். பிறகு, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக பதவியேற்றார். பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட இயக்குநராக இறுதிவரை பணியாற்றினார்.
* யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் அல்லாத 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து ஆல்பா, பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கினார்.
* வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். கதிரியக்கத்தின் மிக முக்கிய அம்சமான எரியாற்றல் குறித்தும் ஆராய்ந்தார். இது, வேதியியல் வினைகளில் இருந்து வெளிப்படும் ஆற்றலைவிட அதிகம் என்று நிரூபித்தார். இதன்மூலம் அணு ஆற்றல் என்ற முக்கியக் கோட்பாட்டை உருவாக்கினார்.
* ‘அரை ஆயுள்’ என்ற முக்கியமான கோட்பாட்டை வகுத்தார். இது ‘கதிரியக்கக் காலக் கணிப்பு’ (Radioactive dating) என்ற உத்திக்கு வழிவகுத்தது. புவியியல், தொல்பொருளியல், வானியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் இது பயன்படுகிறது.
* கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். 1914-ல் சர் பட்டம் பெற்றார். ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 5 ஆண்டுகள் அதன் தலைவராகப் பணியாற்றினார்.
* அணுக் கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள்தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்துக்கும் அடித்தளமாக விளங்குகின்றன. ‘அணுக்கரு இயற்பியலின் தந்தை’ என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 66-வது வயதில் (1937) மறைந்தார்.