டைகர் வரதாச்சாரியார்
பிரபல கர்னாடக இசைப் பாடகர் ‘டைகர்’ வரதாச்சாரியார் (Tiger Varadachariar) பிறந்த தினம் (ஆகஸ்ட் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
- செங்கல்பட்டு அருகே கொளத் தூரில் (1876) பிறந்தார். தந்தை தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லவர். சிறுவன் தன் அக்கா பாடுவது, தெருக்கூத்து, பஜனைப் பாடல் களை உன்னிப்பாகக் கேட்டு கேள்வி ஞானத்திலேயே இசை பயின்றான். இரு சகோதரர்களும் இசைக் கலைஞர்கள்.
- கிராமத்தில் ஒரு ஆசிரியரிடம் தொடக்க இசைப் பயிற்சி பெற்றார். 14-வது வயதில் சகோதரர்களுடன் சேர்ந்து திருவையாறில் பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் குருகுல முறைப்படி இசை பயின்றார். பின்னர் சென்னை வந்த மூவரும் திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டையில் குடியேறினர். அதனால் ‘காலடிப்பேட்டை சகோதரர்கள்’ என அழைக்கப்பட்டனர்.
- இசையில்தான் ஈடுபாடு என்றாலும், குடும்பச் சூழல் காரணமாக சர்வே துறையில் வேலைக்கு சேர்ந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பணிபுரிந்தார். இசைப் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டார். பணி முடிந்த பிறகு கோயில்கள், திருமண விழாக்களில் கச்சேரி செய்வார்.
- மைசூர் நவராத்திரி விழாவில் பாட இவருக்கு அழைப்பு வந்தது. அப்போது இவர் பாடிய பல்லவியைக் கேட்ட மைசூர் மகாராஜா, இவரை அரண்மனை ஆஸ்தான பாடகராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டவர், சர்வே வேலையை ராஜினாமா செய்தார்.
- ஒரு சமயம், மிக நுட்பமான ஒரு பல்லவியை இவர் தன்னை மறந்து 4 மணி நேரம் பாடியதைக் கேட்டு வியந்த மகாராஜா இவருக்கு ‘டைகர்’ என்ற பட்டத்தை சூட்டினார்.
- மைசூர் அரண்மனையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னை மியூசிக் அகாடமியின் ஆசிரியர்களுக்கான இசைக் கல்லூரி (டீச்சர்ஸ் காலேஜ் ஆஃப் மியூசிக்) முதல்வராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.
- சென்னை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியபோது, இவரது ஆலோசனையின்படி டிப்ளமோ இசைப் படிப்பு தொடங்கப்பட்டது. நகைச்சுவை உணர்வு மிக்கவர். ஒருமுறை சீர்காழியில் கச்சேரி நடந்தபோது ரசிகர்கள் விரும்பிய ராகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக, ‘கத்தரிக்காய்.. கத்தரிக்காய்’ என்று காய்கறிக்காரர் விற்றுக்கொண்டு போக, ‘கத்தரிக்காய் வாங்க வாயேண்டி தோழி’ என்று பல்லவி பாடி சிரிப்பலையை ஏற்படுத்தினாராம்.
- அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி, சென்னை அடையாறு கலாேக்ஷத்ராவில் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். பல பாடல்களை இயற்றி மெட்டு அமைத்துள்ளார். தான் எழுதி வைத்திருக்கும் இசைக்குறிப்புகளை (நொட்டேஷன்) மாணவர்களிடம் கொடுக்கமாட்டார். ‘நீங்களே உருவாக்குங்கள்’ என்று நம்பிக்கையூட்டுவார்.
- எளிமையாக வாழ்ந்தார். மாணவர்கள் உட்பட யாரிடமும் கோபித்துக்கொள்ள மாட்டார். நெற்றியில் நாமம், கையில் குடை, தென்னங்கீற்றால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது.
- சென்னை மியூசிக் அகாடமி இவருக்கு 1932-ல் ‘சங்கீத கலாநிதி’ விருதை வழங்கியது. பல சீடர்களை உருவாக்கி கர்னாடக இசையை பிரபலமாக்கிய டைகர் வரதாச்சாரியார் 73-வது வயதில் மறைந்தார்.