முன்ஷி பிரேம்சந்த்
இந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்த தினம் (ஜூலை 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் பனாரஸ் அருகே லம்ஹி கிராமத்தில் (1880) பிறந்தார். இயற்பெயர் தன்பத்ராய் ஸ்ரீவத்சவ். தந்தை கணக்குப்பிள்ளை. லால்பூர் மதரஸாவில் 7 வயதில் கல்வியைத் தொடங்கினார். அங்கு உருது, பாரசீகம் கற்றார். 8 வயதில் அம்மா இறந்ததால், அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். வறிய சூழலில் வளர்ந்தார்.
- பெட்டிக்கடைக்காரர் ஒருவரை சினேகம் பிடித்துக்கொண்டு அவரது கடையில் இருந்த உருது புத்தகத்தைப் படித்தார். புத்தக விற்பனையாளர் ஒருவரிடம் வேலை கேட்டு வாங்கி அங்கிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து முடித்தார். பனாரஸ் குயின்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 13 வயது முதல் எழுதத் தொடங்கினார்.
- தந்தை இறந்ததும், குடும்பச் சுமை இவரது தோள்களில் விழுந்தது. டியூஷன் சொல்லிக்கொடுத்து சம்பாதித்தார். உதவி ஆசிரியராக அரசுப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார். முதலில் ‘பாபு நவாப் ராய் பனாரஸி’ என்ற பெயரிலும், பிறகு பிரேம்சந்த் என்ற பெயரிலும் எழுதினார்.
- தான் ஏழ்மையில் இருந்தாலும், தன்னைவிட ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் தயாள குணம் படைத்தவர். 1903-ல் உருது இதழில் இவரது முதல் நாவல் ‘அஸ்ரர்-இ-மாபிட்’ தொடராக வெளிவந்தது.
- ‘துனியா கா அன்மோல் ரதன்’ என்ற இவரது முதல் சிறுகதை 1907-ல் வெளியானது. தொடர்ந்து பல நூல்கள் வெளிவந்தன. உருதுவிலும், பிறகு இந்தியிலும் எழுதினார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அரசு வேலையைத் துறந்தார். முழு மூச்சாக இலக்கியப் பணியில் இறங்கினார்.
- ‘மர்யாதா’, ‘மாதுரி’ இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஒரு அச்சகத்தைத் தொடங்கினார். ‘ஹன்ஸ்’ என்ற இதழை 1930-ல் தொடங்கினார். ‘பிரேம் பக்சி’, ‘ரங்பூமி’, ‘காயகல்ப்’, ‘கோதான்’, ‘கர்மபூமி’ உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார்.
- இவரது ‘பிரேமாஷ்ரம்’, ‘நிர்மலா’, ‘கபன்’ நாவல்கள், ‘மானசரோவர்’, ‘பிரேம்துவாதஷி’ ஆகிய கதைத் தொகுப்புகள் பிரபலமானவை. 300-க்கும் அதிகமான கதைகள் எழுதியுள்ளார்.1934-ல் இவரது சேவாசதன் என்ற நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. வசனங்களையும் இவரே எழுதினார். தனது படைப்புகள் மூலம் மக்களிடம் தேசிய உணர்வுகளை வளர்த்தார்.
- அவரது எழுத்துக்கள் படிப்பவர்கள் மனதில் ஒரு காட்சிப்பதிவு போல பதியும் ஆற்றல் கொண்டிருந்தன. பிரச்சினைகளை எதார்த்தமாக நகைச்சுவை இழையோட சித்தரித்தவர்.
- இவரது நூல்களை சாகித்ய அகாடமி பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளது. அரசியல், சமூகச் சீர்கேடு, தீண்டாமை, இன, மத மோதல்கள் குறித்து பல கட்டுரைகளை தனது ஜாகரண், ஹன்ஸ் பத்திரிகைகளில் எழுதிவந்தார்.
- இலக்கிய பரிவர்த்தனை மூலம் நாட்டில் ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும் என்று நம்பினார். இந்தி இலக்கிய வரலாற்றில் புதுயுகம் படைத்தவர். தன்னை ‘பேனா வீரன்’ என்று கூறிக்கொள்வார். சரத்சந்திரரால் ‘உபன்யாஸ் சாம்ராட்’ (நாவல் சக்ரவர்த்தி) என்று போற்றப்பட்ட முன்ஷி பிரேம்சந்த் 56 வயதில் (1936) மறைந்தார்.