கொரோனா பாதிப்பும் காற்று மாசுபாடும்
நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 15 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியைதான் அதிகம் பாதிக்கிறது. நுரையீரல் பாதிப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகையில் காரணமாக இருப்பதால் அவர்களை கொரோனா வைரஸ் தொற்றும் எளிதில் பாதிப்படைய செய்து விடுகிறது.
ஏற்கனவே நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா மரணம் 19 சதவீதமாக உள்ளது.
மேலும் வட அமெரிக்காவில் 17 சதவீதமாக இருக்கிறது. அதிலும் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கிழக்கு ஆசியாவில் காற்று மாசுபாடு 27 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
காற்று மாசுபாட்டுக்கும், கொரோனா இறப்புக்கும் இடையேயான நேரடி தொடர்பை எங்கள் ஆய்வு குறிப்பிடவில்லை. இருப்பினும் மறைமுக தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். சுவாச கோளாறுகளை உள்ளடக்கிய நாள்பட்ட நோய்கள், பிற மருத்துவ நிலைமைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. உதாரணமாக இங்கிலாந்தில் 44 ஆயிரம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருந்தால் அதில் காற்று மாசுபாட்டால் 14 சதவீதம் பேர் மரணமடைந்திருப்பதாக மதிப்பிடுகிறோம்.
அதாவது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் காற்று மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கக்கூடும். காற்று மாசுபாட்டிற்கான நீண்டகால வெளிப்பாடு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஆகிய இரண்டும் ஒன்றிணைந்தால், பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக இதயம், ரத்த நாளங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.