எண்ணிம சுகாதார அட்டை(Digital Health Card) புரிந்துகொள்வது எப்படி?
அண்மையில், ஆயுஷ்மான் பாரத் எண்ணிம இயக்கத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன்படி, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எண்ணிம சுகாதார அட்டை(Digital Health Card) இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் இயக்கத்தின் நீட்சி இது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சுகாதாரப் பதிவை எண்ணிம முறையில் பாதுகாக்கும் இந்தப் புதுக் கருவியை எப்படிப் புரிந்துகொள்வது?
எண்ணிம சுகாதார அட்டையானது ஆதார் அட்டை போலவே தனித்தன்மை உடையது. பயனாளி இந்த அட்டையில் 14 இலக்க எண்ணைப் பெறுவார். இந்த எண், சுகாதாரத் துறையினருக்கு அவரை அடையாளம் காட்டும். இதில் அவருடைய உடல்நலம் தொடர்பான, உண்மையான தகவல்கள் பதிவுசெய்யப்படும். எந்த நோய்க்கு, எப்போது, எந்த மருத்துவமனையில், என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன, என்னென்ன மருந்துகள் வழங்கப்பட்டன, பிற உடல்நலப் பிரச்சினைகள் உண்டா என்பது போன்ற தகவல்கள் இதில் இருக்கும். இதன் மூலம், அவருடைய மருத்துவ வரலாற்றை முழுமையாக அறிய முடியும்.
இந்த அட்டையைக் கைபேசி எண் அல்லது ஆதார் எண் மூலம் உருவாக்கலாம். ndhm.gov.in எனும் இணையதளத்துக்குச் சென்று இதைப் பெற முடியும். இந்த அட்டையைச் சுயமாக உருவாக்க இயலாதவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், சுகாதாரம் மற்றும் குடும்பநல மையம் அல்லது பதிவுபெற்ற சுகாதார அதிகாரி மூலமும் உருவாக்கிக்கொள்ளலாம்.
தகவல்களை உள்ளிடும் முறை
எண்ணிம சுகாதார அட்டையில், பயனாளியின் மருத்துவத் தகவல்களை உள்ளிடுவதற்கு, முதலில் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவகங்கள், மருத்துவர்கள் ஆகியோர் பதிவுசெய்யப்படுவார்கள். இதைத் தொடர்ந்து, பயனாளி ‘NDHM ஹெல்த் ரெக்கார்ட்ஸ் செயலியை’ப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பயனாளியின் 14 இலக்க எண் மற்றும் கடவுச்சொல் மூலம் இதனுள் நுழையலாம். இந்தச் செயலியில் பயனாளி சிகிச்சை பெற்ற மருத்துவமனையை இணைத்தால், அங்குள்ள பயனாளியின் உடல்நலம் தொடர்பான தகவல்கள், அவரது கைபேசி செயலிக்கு வந்துவிடும். மருத்துவமனைக்கான ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தும் அந்தந்த மருத்துவமனையை இணைக்க முடியும். பயனாளி அடுத்தடுத்துப் பெறும் சிகிச்சை, நோயறிதல், சோதனை விவரங்கள், பிற தகவல்கள் ஆகியவற்றையும் இந்தச் செயலியில் உள்ளிடலாம். நாடெங்கிலும் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் எந்தவொரு மருத்துவமனையும் பயனாளியின் சுகாதார அட்டை மூலம், அவரது உடல்நலத் தகவல்களைப் பார்க்க முடியும். இதற்குப் பயனாளியின் ஒப்புதல் பெறுவது அவசியம். பயனாளி எப்போது வேண்டுமானாலும் சுகாதாரப் பதிவை நிறுத்தவோ நீக்கவோ முடியும். அவரது தகவல்கள் பகிரப்பட்ட விவரத்தையும் அறிய முடியும்.
என்னென்ன நன்மைகள்?
எண்ணிம சுகாதார அட்டையில் மிகப் பெரிய நன்மை என்னவென்றால், இதுவரை தனியொரு மருத்துவமனையில் அல்லது மருத்துவமனைக் குழுவில் மட்டுமே பதிவுசெய்யப்பட்ட பயனாளியின் சுகாதாரத் தகவல்களை இனிமேல் நாட்டின் எல்லா மருத்துவக் கட்டமைப்புகளிலும் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ள முடியும். பயனாளி முதல்முறையாக அதைப் பயன்படுத்திய பிறகு, மறுமுறை அதே மருத்துவரிடம் வந்தாலும், வேறு மருத்துவரிடம் சென்றாலும், முந்தைய சிகிச்சைகள், மருந்துச் சீட்டுகள் மற்றும் சோதனை விவரங்களை அவருடன் எடுத்துச் செல்லத் தேவையில்லை. இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்குச் சிகிச்சைக்குச் சென்றாலும், பயனாளியின் கடந்த கால சுகாதாரத் தகவல்களை இந்தத் தனித்துவமான அட்டை மூலம் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பது எளிதாகும். மேலும், மருத்துவ ஆவணம் தொலைந்துவிட்டால் கவலையில்லை. பழைய சோதனை அறிக்கைகள் இல்லையென்றால், எல்லாச் சோதனைகளையும் மறுபடியும் மேற்கொள்ள வேண்டியதில்லை. பிற நோயாளிகளின் ஒப்புதலுடன் பயனாளிக்குத் தெரிந்த ஒருவரின் உடல்நலப் பதிவுகளையும் அவருடைய அட்டையில் நிர்வகிக்கலாம். இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். காகிதத் தேவையைக் குறைக்கும். கோப்புகள் வைக்கும் இடம் சுருங்கிவிடும். போலி மருத்துவர்களை இனம்கண்டுவிடும். எதிர்காலத்தில் பொதுச் சுகாதார முன்னேற்றத்துக்குத் தேவையான முன்திட்ட வரைவைத் தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்வதும் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதும் மேம்படும்.
இந்த அட்டையின் தகவல் பாதுகாப்பு தொடர்பில் பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்தான் முதல் பிரச்சினை. கடந்த காலத்தில் ஆதார் அட்டைத் தகவல்கள் திருடப்பட்ட நிகழ்வுகளை முன்வைத்து, நாட்டில் சைபர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றே வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர். மேலும், ‘சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றுக்குத் திருடப்பட்ட சுகாதாரத் தகவல்கள் உதவலாம். தகவல்களைப் பதிவிடும்போது, மனிதத் தவறுகள் ஏற்படலாம்; தகவல்கள் விட்டுப்போகலாம்; வேண்டுமென்றே மாற்றப்படலாம். இவற்றைக் கண்காணிப்பது யார் என்ற கேள்விக்கு இதில் விடையில்லை. நோய் குறித்த இந்தப் பின்னணிகள், அந்த நபரின் நோயையும் சிகிச்சையையும் மாற்றிவிடலாம். இது அவரது உடல்நலனுக்கு ஆபத்தை வரவழைக்கலாம்’ என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், ‘இந்தியாவில் தகவல் பாதுகாப்புக்கெனத் தனிச் சட்டம் இல்லை. ‘தகவல் பாதுகாப்பு மசோதா - 2019’ மட்டுமே உள்ளது. தனிச் சட்டம் இயற்றினால் மட்டுமே தகவல் தொடர்பில் தவறிழைப்பவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை வழங்க முடியும்’ என்கிறார் பிரபல இணையப் பாதுகாப்பு நிபுணர் பவன் துக்கல்.
அடுத்து, நாட்டில் கிராமப்புறம், கடலோரம் மற்றும் மலைவாழிடங்களில் திறன்பேசி மற்றும் இணைய வசதிகள் குறைவாகவே இருக்கும். அங்குள்ளவர்களுக்கு இந்த அட்டையின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் குறைவு. மொழி ஒரு தடையாக இருக்கும். இவை இந்தத் திட்டத்துக்குப் பெரிய சவாலாக இருக்கும். எனவே, எண்ணிம சுகாதார அட்டையை அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்றால், கிராமம் தொடங்கி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இணையம் சார்ந்த மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். தகவல்களை உள்ளிடுபவர்கள் மற்றும் அவற்றைச் சரிபார்த்துக் கையாளும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். முன்திட்டமிடுதல் மூலம் சுகாதாரத் துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கி, மாநிலங்களுக்குப் பகிர்வது முக்கியம். இந்த அட்டை, இந்திய சுகாதாரத் துறையை மேம்படுத்தும் புரட்சிகர இயக்க சக்தியாக இருக்கும் என்ற பிரதமரின் அறைகூவல் உண்மையாக வேண்டுமானால், இவை அனைத்தும் அவசியமான அடிப்படைகள்